Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM
தூத்துக்குடிக்கு கப்பல் மூலம் வந்த ரூ.1,500 கோடி மதிப்பிலான கோக்கைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்மூலம் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மையமாக தூத்துக்குடி மாறி வருவது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்த கப்பலில் போதைப் பொருள் பெருமளவில் கடத்தி வரப்பட்டுள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உதவி இயக்குநர் கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கொழும்புவில் இருந்து வந்த ‘எக்ஸ்பிரஸ் கோட்டபாக்ஸி' என்ற கப்பலில் வந்த 8 சரக்கு பெட்டகங்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவற்றைத் திறந்து பார்த்தபோது, ஒரு பெட்டகத்தில் மரத்தடிகளுக்கு இடையே 9 பெரியபைகளில் 300 கிலோ எடை கொண்ட‘கோக்கைன்' என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1,500 கோடி.
பனாமாவில் இருந்து கடத்தல்
இந்தப் போதைப் பொருள் பனாமா நாட்டில் இருந்து கொழும்பு வழியாக தூத்துக்குடிக்கு வந்துள்ளது. மரத்தடி இறக்குமதி செய்வதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மரத்தடிகளை தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த நிறுவனம் இறக்குமதி செய்துள்ளது. இது தொடர்பாக, மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர். மரத்தடி இறக்குமதி நிறுவனத்தினரிடமும் விசாரணை நடக்கிறது.
இந்தியாவில் தேவை அதிகரிப்பு
‘ராயல் போதைப் பொருள்' எனப்படும் கோக்கைன், தென் அமெரிக்கநாடுகளில் அதிகளவில் உற்பத்தியாகிறது. குறிப்பாக கொலம்பியா நாடுதான் சட்டவிரோத கோக்கைன்உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது. பெரு, பொலிவியா போன்ற நாடுகள் அடுத்த இடங்களில் உள்ளன. தூத்துக்குடிக்கும் தென் அமெரிக்காவில் இருந்துதான் கோக்கைன் வந்திருக்க வேண்டும்.
ஏற்கெனவே, கடந்த 2 தினங்களுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து மீன்பிடிப் படகில் கடத்திவரப்பட்ட 300 கிலோ எடையுள்ள கோக்கைன் கொச்சி துறைமுகத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, கொழும்புவைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அடுத்த 2 நாட்களுக்குள் தூத்துக்குடியில் பெருமளவில் கோக்கைன்பிடிபட்டுள்ளது. எனவே, கோக்கைனின் தேவை இந்தியாவில் அதிகமிருப்பது தெரியவந்துள்ளது. மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் சினிமா பிரபலங்கள்உள்ளிட்ட கோடீஸ்வரர்கள் கோக்கைனை பயன்படுத்துகின்றனர்.
சர்வதேச கடத்தல் மையம்?
அண்மைக் காலமாக சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மையமாக தூத்துக்குடி மாறி வருகிறது. கடந்த 5 மாதங்களில் ரூ.2,000 கோடி மதிப்பிலான பல்வேறு போதைப் பொருட்கள் தூத்துக்குடியில் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது, இதை உறுதிப்படுத்துகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 25-ம்தேதி தூத்துக்குடி அருகே நடுக்கடலில் பாகிஸ்தானில் இருந்து வந்த படகில் ரூ.600 கோடி மதிப்பிலான ஹெராயின் மற்றும் சிந்தட்டிக் போதைப் பொருட்கள், 5 நவீன துப்பாக்கிகள், சேட்டிலைட் போன் உள்ளிட்டவை பிடிபட்டன. படகில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 6 பேரும், சென்னையில் சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை மையமாகக் கொண்டு இயங்கி வருவது தெரியவந்தது.
கஞ்சா, சாரஸ்
வெளிநாடுகளில் இருந்து ஹெராயின், கோக்கைன் போன்ற விலை உயர்ந்த போதைப் பொருட்கள் தூத்துக்குடி வழியாக இந்தியாவுக்கும், கஞ்சா, சாரஸ், ஹசீஸ் போன்ற விலை குறைந்த போதைப் பொருட்கள் இந்தியாவில் இருந்துதூத்துக்குடி வழியாக இலங்கை,மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் கடத்தப்படுகிறது. கடந்த 3மாதங்களில் ரூ.20 கோடி மதிப்பிலான கஞ்சா, சாரஸ், ஹசீஸ் போன்றவை பிடிபட்டுள்ளன. கஞ்சா சார்ந்த போதைப் பொருட்கள் தேனி மாவட்டத்தில் இருந்துதான் அதிகம் கொண்டு வரப்படுகின்றன.
இதையடுத்து, கடலோர காவல் படையினர், மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர், சுங்கத்துறையினர் மற்றும் மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தூத்துக்குடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT