Last Updated : 14 Dec, 2015 07:58 AM

 

Published : 14 Dec 2015 07:58 AM
Last Updated : 14 Dec 2015 07:58 AM

மலை மலையாக குவிந்துள்ள குப்பைகள்.. கவனிக்கப்படாத பகுதிகள்: தூய்மை இந்தியா திட்டத்தால் சுத்தமாகுமா தமிழகம்?

பிரதமர் மோடியுடன் பிரபலங்களும் களமிறங்க அழைப்பு

*

இந்தக் கட்டுரை எழுதத் தொடங் கிய இந்தத் தருணத்தில் தமிழகத்தில் நூற்றுக்கணக் கான குழந்தைகள் வாந்தியினாலும், பேதியினாலும் அவதிப்பட்டுக் கொண்டிருப்பது அதிகாரபூர்வ புள்ளிவிவரம் ஏதும் தேவையற்ற உண்மை நிலவரம்.

தமிழகத்தில் கடலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட் டங்களில் பெருமழை பாதிப்புகளைப் பட்டியலிட வேண்டிய அவசியம் இல்லை. எல்லாம் எல்லாருக்கும் தெரிந்தவைதான். மீட்புப் பணிகள் நிறைவுற்று, நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்துகொண்டிருக் கின்றன. அரசும் தன்னார்வலர்களும் சோர்வின்றி இயங்கி வருவதையும் பார்க்க முடிகிறது. இந்த வேளையில், நிவாரண உதவிகளுக்கு ஈடானதும், ஒருவகையில் அதைவிட முக்கியத் துவம் வாய்ந்ததுமான மக்களின் சுகாதாரத்தைப் பேணுவதற்கான நடவடிக்கைகளில் இன்னும் தீவிரம் காட்ட வேண்டியது அவசியம்.

6 நாள்... 55,118 டன் குப்பை

சென்னையில் மட்டும் சுமார் 1 லட்சம் டன்னுக்கு குப்பைகள் மற்றும் சேறுகளை அகற்ற வேண்டிய நிலையில், 6-ம் தேதி சிறப்பு தூய்மைப் பணி தொடங்கப்பட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியிடம் உள்ள டிப்பர் லாரிகளுடன், பிற மாநகராட்சிகளைச் சேர்ந்த 113 டிப்பர் லாரிகள், வெளியில் இருந்து வரவழைக்கப்பட்ட 200 டிப்பர் லாரிகள் உட்பட மொத்தம் 619 டிப்பர் லாரிகளைக் கொண்டு மிகப்பெரிய அளவில் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. துப்புரவு பணியாளர்களின் அயராத உழைப்பால் 6 நாட்களில் 55 ஆயி ரத்து 118 டன் குப்பைகள் அகற் றப்பட்டுள்ளன என்பது நிம்மதி தரும் செய்தி.

ஆனால், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிவாரண உதவிகள் வழங்கும் பணிகள் முடியவே இன்னும் சில நாட்கள் ஆகலாம். இத்தகைய சூழலில், துப்புரவுப் பணிகள் முழுவீச்சில் இல்லை என்றே தகவல்கள் கூறுகின்றன. ஊடக வெளிச்சம் அதிகம் உள்ள சென்னையை எடுத்துக்கொண்டால், மக்கள் அதிகம் புழங்கும் பிரதான சாலைகள், முக்கிய குடியிருப்புப் பகுதிகள், கவனத்துக்குரிய இடங் களில் துப்புரவுப் பணிகள் முழுவீச் சில் நடக்கின்றன. ஆற்றங்கரையை ஒட்டியுள்ள குடிசைப் பகுதிகளிலும், மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கின்ற சந்து பொந்துகளிலும் இன்னமும் கழிவுகள் அகற்றப் படாமல் இருக்கின்றன.

சென்னைக்கே இந்த நிலை என்றால், மற்ற 3 மாவட்டங்களில் நிலைமையை விவரிக்கத் தேவை யில்லை. மீட்பு, நிவாரணப் பணி களைப் போலவே, துப்புரவுப் பணியி லும் அரசு நிர்வாகத்துக்காக காத் திருக்காமல் பொதுமக்களுடன் தன் னார்வலர்கள் களமிறங்கியுள்ளனர். இதுவும் நகர்ப்புறங்களில் மட்டுமே. சென்னை புறநகர், கடலூர், திரு வள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் சிறு நகரங்கள், கிராமங்களில் துப்புரவுப் பணியின் தேவை மிக அதிகமாக உள்ளது.

இந்த சூழலில், சற்றே ஓராண்டு பின்னோக்கிப் பார்ப்பதன் அவசியம் ஏற்படுகிறது. இந்திய அரசியல் வரலாற்றில் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ஏற்பட்ட மாற்றமாக, மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்தது. மோடியின் முதல் அறிவிப்பு எதுவாக இருக்கும் என்று மக்கள் காத்திருந்த வேளையில், துடைப்பத்தைக் கையிலெடுத்து நாட்டுக்கே சுகாதாரத்தின் முக்கி யத்துவத்தை உணர்த்தும் விதமாக ‘தூய்மை இந்தியா’ (ஸ்வச் பாரத்) எனும் பிரச்சாரத் திட்டத்தை அறி வித்தார் மோடி. ஒரு பக்கம் அதற்கு விமர்சனங்கள் எழுந்தாலும், மறு பக்கம் கையில் துடைப்பத்துடன் கூடிய ஆதரவுடன் வீதிகளில் கள மிறங்கவும் செய்தார்கள் கவனிக்கத் தக்கவர்கள்.

கமல்ஹாசன், பிரியங்கா சோப்ரா என ஏராளமான பிரபலங்கள் துடைப் பக் கட்டைகளுடன் வீதியில் வலம் வந்தபோது, உள்ளூர் முதல் உலக அரங்கு வரையிலான ஊடகங்களில் ஒருமாத காலம் புகைப்பட கேலரிகள் வரிந்துகட்டின. அதைத் தொடர்ந்து, வழக்கமான கழிவறைகள், தூய்மைப் பணி களுக்காக ஒதுக்கீடுகளுக்குகூட பட்ஜெட்டில் ‘தூய்மை இந்தியா’ முலாம் பூசப்பட்டு, அந்தப் பிரச் சாரத் திட்டம் பரணில் பத்திரப் படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 4 மாவட்டங்களை துவம்சம் செய்துள்ள பெருமழை, பிரதமர் மோடிக்கு மிகப் பெரிய வாய்ப்பு ஒன்றை அளித்திருக்கிறது. ஆம், தனது தனித்துவத் திட்டமாக போற்றும் ‘தூய்மை இந்தியா’ என்பது வெறும் பிரச்சாரம் அல்ல; அது, நடைமுறையில் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய ஓர் இயக்கம் என்பதை நிரூபிப்பதற்கான தருணம் இது. உடனடியாக ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தூசிதட்டி, நான்கே நாட்களில் நான்கு மாவட்டங்களையும் தூய்மை செய்ய நடவடிக்கை எடுத்து, தன் திட்டத்தின் மகத்துவத்தை பறைசாற்ற பிரதமர் மோடி முன்வர வேண்டும்.

அழைப்பு விடுப்பாரா மோடி?

மோடி இதற்காக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவதோடு, தன் வழக்கமான தொனியில் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கவும் வேண்டும். மத்திய அரசு தரப்பில் இருந்து தூய்மைப் பணிகளுக்கான உதவிகளை வழங்கி களப்பணியில் தீவிரம் காட்டுவதன் மூலம் ‘தூய்மை இந்தியா’ என்பது உண்மையிலேயே உன்னதமான திட்டம்தான் என் பதை உலகுக்கு சொல்ல முடி யும். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள பாஜகவினர் துப்புரவுப் பணிக் களத்தில் இறங்கி, இந்த 4 மாவட்டங்களிலும் தூய்மைப் பணியைச் செய்து, தங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்கலாம்.

இவ்வாறு செயல்படுத்துவதன் மூலம் ‘தூய்மை இந்தியா’ தொடங்கி ‘மேக் இன் இந்தியா’ வரை அனைத்து திட்டங்களுமே வெற்று பிரச்சாரம் சார்ந்தது அல்ல என்பதை அனைவருக்கும் புரியவைப்பதற்கு பிரதமருக்கு நல்ல வாய்ப்பு.

வீதியில் இறங்கி வாருங்கள்..

பிரதமர் மோடி ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அறிவித்தவுடன், பாலிவுட் நட்சத்திரங்களும், கிரிக்கெட் பிரபலங் களும் வீதிகளில் இறங்கினர். தாங்கள் இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் காட்சிகளைப் புகைப்படங்களாக எடுத்து ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் டிரெண்டாக்கினர். இதைக் கண்ட தமிழகப் பிரபலங்கள் பலரும் தாமாகவே முன்வந்து குப்பைகளைத் தேடத் தொடங்கினர். குப்பைகளைக் களைந்து செல்ஃபி பகிர்ந்து சமூக அக்கறையை வெளிப்படுத்தினர். அந்த பிரபலங்களுக்கும் இது சரியான தருணம். அவர்கள் அனைவரும் தங்கள் படைகளுடன் திரண்டு வீதிகளுக்கு வரும் பட்சத்தில், மலை மலையாகக் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றி, பெரிய அளவிலான சுகாதார சீர்கேட்டில் இருந்து தமிழகத்தை காப்பாற்ற முடியும். இப்போது செய்யக்கூடிய பணி களைப் படமெடுத்துப் பகிரட்டும். அதுவே உண்மையான வரலாறாக மாறக் கூடும்.

கமலுக்கு ஓர் உத்தம வாய்ப்பு!

பிரதமர் மோடி தனது முன்னோடித் திட்டமான ‘தூய்மை இந்தியா’வை அறிவித்தபோது, தேச அளவில் அவர் அழைப்பு விடுத்தவர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். அந்த அழைப்பை ஏற்று களமிறங்கியவர்களில் முதன்மை யானவரும் இவரே.

இப்போது அவர் தன் வீட்டு ஜன் னலைத் திறந்து பார்த்தால், அங்கு மண்டிக் கிடக்கும் குப்பைகளும் கழிவுகளும் அவர் கண்ணில் படும். ஆங்காங்கே வெள்ள நிவா ரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தனது நற்பணி இயக்கத்தினரை ஒன்று திரட்டி, ‘தூய்மை இந்தியா’ வின் தூதுவராக அவர் களத்தில் இறங்க வேண்டும். இது நிகழ்ந்தால், உண்மையில் அவருக்கு ‘மக்கள் நாயகன்’ எனும் பட்டமும் கிடைப்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x