Last Updated : 21 Apr, 2021 08:43 PM

 

Published : 21 Apr 2021 08:43 PM
Last Updated : 21 Apr 2021 08:43 PM

இரவு நேர ஊரடங்கு, பொதுப் போக்குவரத்து முடக்கம்: வடமாநிலம் செல்வோர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்

வேலூரில் தங்கியிருந்த வட மாநிலத்தவர்கள் ரயில் மூலம் சொந்த ஊர் திரும்ப காட்பாடி ரயில் நிலையத்தில் இன்று கூட்டம் கூட்டமாகக் குவிந்ததால் தனிமனித இடைவெளி கேள்விக்குறியாக மாறியது. | படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் வேலூரில் தங்கியிருந்த வட மாநிலத்தவர்கள் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்ல காட்பாடி ரயில் நிலையத்தில் குவிந்து வருவதால் தனிமனித இடைவெளி கேள்விக்குறியாக மாறி அரசின் உத்தரவு காற்றில் பறந்தது.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் அதைக் கட்டுக்குள் கொண்டு வர மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள், ஆட்டோக்கள், கார், வேன் என எந்த வாகனமும் செல்ல அனுமதியில்லை என்பதால் வெளியூர்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவம், சுற்றுலா, கல்வி, ஆன்மிகம் எனப் பல்வேறு காரணங்களுக்காக வேலூரில் தங்கியிருந்த வட மாநிலத்தவர்கள், கரோனா 2-வது அலையால் சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்து அதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

இரவு நேர ஊரடங்கில் ரயில்கள் சென்று வர எந்தத் தடையும் இல்லை என்பதால் வட மாநிலத்தவர்கள் ரயில் மூலம் சொந்த ஊர்களுக்குத் திரும்ப ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் வழியாக வட மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களில் பயணிக்க ஆயிரக்கணக்கான பயணிகள் இன்று ரயில் நிலையத்தில் கூட்டம் கூட்டமாகக் குவிந்தனர்.

காட்பாடி ரயில் நிலையத்தில் 1-வது நடைமேடை, 2 மற்றும் 3-வது நடைமேடைகளில் வட மாநிலம் செல்லும் ரயில்கள் நின்று செல்லும் என்பதால் அந்த 3 நடைமேடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் இன்று கூடியது. இதைக் கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளர் டேப்ரத் சத்பதி, உதவி காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் 10க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர். முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இலவச முகக் கவசங்களை வழங்கி, கரோனா பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் இருந்து காட்பாடி ரயில் நிலையம் வழியாக ஹவுரா செல்லும் விரைவு ரயிலில் தீ தடுப்பு சாதனங்கள் முறையாகச் செயல்படுகிறதா? கோடை காலம் என்பதால் ரயிலில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் தீ தடுப்பு சாதனங்களை ரயிலில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் கையாளத் தெரிகிறதா? என்பதைக் காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஆய்வு செய்து அதற்கான விளக்கத்தை அளித்தனர்.

அதே நேரத்தில், முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்கும் பயணிகளை மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருவதால், வழியனுப்ப வந்தவர்கள் ரயில் நிலையம் முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா வேகமாகப் பரவி வருவதால் கரோனாவைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதைத் துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x