Published : 21 Apr 2021 03:58 PM
Last Updated : 21 Apr 2021 03:58 PM
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளதால், சுற்றுலாவை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா மாவட்டமாக விளங்கி வருகிறது. இதனைக் காண உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் இங்கு வந்து செல்கின்றனர். இவர்களை நம்பி ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்ற ஆண்டு கரோனா பாதிப்பு காரணமாக, கோடை சீசன் காலத்தில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாமல் வர்த்தகம் முடங்கியது. இதனால், சுற்றுலா தொழிலை நம்பி இருந்த வியாபாரிகள் மற்றும் அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதனையடுத்து, கடந்த ஆண்டு இறுதியில் அனைத்துப் பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் படிப்படியாகத் திறக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இன்று வரையிலும் இ-பதிவு முறையில் சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா மெல்ல உயிர் பெற்றது.
சுற்றுலா தொழிலை நம்பியுள்ள சிறு தொழிலாளர்கள், ஹோட்டல்கள், காட்டேஜ்கள் உரிமையாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் வருவாய் ஈட்டத் தொடங்கினர். கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட கோடை விழா, இந்த ஆண்டு விமரிசையாக நடைபெறும் என, அனைத்துத் தரப்பினரும், வியாபாரிகளும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்தச் சூழலில், கரோனா தொற்றின் 2-வது அலையால், நீலகிரி மாவட்டத்துக்குச் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லத் தடை விதிக்கப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் சுற்றுலாவை நம்பியுள்ள வியாபாரிகள், ஹோட்டல்கள், காட்டேஜ் உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வர்க்கி, சாக்லேட், நீலகிரி தைலம் விற்பனை உற்பத்தியாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், பூங்காக்கள் மற்றும் புகைப்படத் தொழில் செய்து வருபவர்கள் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளாகவே தொழில் முடங்கியுள்ளதாக உதகையில் தங்கும் விடுதி உரிமையாளர் ச.பசாலுதீன் கூறுகிறார். அவர் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா மட்டுமே வாழ்வாதாரம். சுற்றுலா மற்றும் அதை சார்ந்து ஒரு லட்சம் குடும்பங்கள் உள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளாகத் தொழில் முடங்கியுள்ளது. 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் கோடை சீசன் காலத்தில் நடந்ததால், சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. கடந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்றால் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு மீண்டும் கரோனா 2-வது அலை காரணமாக சுற்றுலாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாங்கள் தங்கும் விடுதிக்கான குத்தகை தொகை, மின்சாரம், தண்ணீர் கட்டணத்தைச் செலுத்தியே ஆக வேண்டும். மூன்றாண்டுகளாகத் தொழில் இல்லாததால் தங்கும் விடுதிகளைப் பராமரிக்கவே முடியவில்லை. எங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் கூட வழங்க முடியாததால், பெரும்பாலான ஊழியர்களைப் பணிக்கு வர வேண்டும் எனக் கூறிவிட்டோம். எங்களுக்குப் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்தார்.
கோடை சீசனை நம்பி கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் வீணாகி விடும் எனக் கவலை தெரிவிக்கிறார் வியாபாரி அஜீஸ்.
அவர் கூறுகையில், "கடந்த ஆண்டும் கரோனா ஊரடங்கு காரணமாக முழுமையாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த முறை தமிழக அரசு நேற்றைய தினம் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லத் தடை விதித்திருப்பது, எங்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளை நம்பி வியாபாரம் செய்யப் பொருட்கள் கொள்முதல் செய்துள்ளோம். பெரும்பாலும் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்படும்.
எனவே, நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் 50 சதவிகிதமாவது சுற்றுலாப் பயணிகளை அனுமதித்து, எங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்" என்றார்.
சுற்றுலா வாகன ஓட்டுநர் நலச்சங்கத் தலைவர் கோவர்தன், "கரோனா பரவல் காலம் முதல் இன்று வரை நாங்கள் வாழ்வாதாரம் இல்லாமல் திண்டாடி வருகிறோம். இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். சுற்றுலாப் பயணிகள் வருகை இல்லாததால் வாகனக் கடன், குடும்பப் பராமரிப்பு, நிதி நிறுவன நெருக்கடி போன்ற பல பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளோம். சுற்றுலாவுக்குக் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT