Published : 21 Apr 2021 03:51 PM
Last Updated : 21 Apr 2021 03:51 PM

இரவு நேர ஊரடங்கு எதிரொலி; ஓசூர் - பெங்களூரு இடையே பேருந்துகள் நிறுத்தம்: பயணிகள் பாதிப்பு

ஓசூர் பேருந்து நிலையம் முன்பு நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் காத்திருக்கும் பயணிகள். | படங்கள்- ஜோதி ரவிசுகுமார்.

ஓசூர்

ஓசூர் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகம் மற்றும் பெங்களுரு செல்லும் பேருந்துகள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இரவு நேர ஊரடங்கு காரணமாக நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டன. இதனால் வழக்கமாகப் பயணிகளின் கூட்டத்தால் இரவு முழுவதும் பரபரப்பாக இயங்கி வரும் ஓசூர் பேருந்து நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று (20-ம் தேதி) முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பேருந்துப் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டது.

ஓசூர்- பெங்களுரு (கர்நாடகா மாநில எல்லை அத்திப்பள்ளி வரை) இடையே தினசரி இயக்கப்பட்டு வரும் 20 நகரப் பேருந்துகளும், தமிழகம் - கர்நாடகா இடையே தினசரி இயக்கப்பட்டு வரும் 400-க்கும் மேற்பட்ட விரைவுப் பேருந்துகளும், ஓசூர் - தேன்கனிக்கோட்டை வட்டத்தில் தினசரி இயக்கப்பட்டு வரும் 80-க்கும் மேற்பட்ட நகர மற்றும் கிராம சேவைப் பேருந்துகளும் கர்நாடக மாநில அரசின் 150-க்கும் மேற்பட்ட பேருந்துகளும் என மொத்தம் 600-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இரவு நேர ஊரடங்கு காரணமாக இயக்கப்படவில்லை. தமிழக நகரங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் பெரும்பாலானவை இரவு 9 மணிக்கே நிறுத்தப்பட்டன.

குறிப்பாக சேலம், வேலூர் வழித்தடத்தில் 9 மணிக்கே பேருந்துகள் இன்றித் திண்டாடிய 100-க்கும் மேற்பட்ட பயணிகள், தேசிய நெடுஞ்சாலையில் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் சரக்கு லாரிகளில் ஏறிச் செல்ல சாலையோரம் காத்திருக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

அதே சமயத்தில் ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் அரசுப் பேருந்துகள் இரவு 10 மணி வரை இயக்கப்பட்டன. பின்பு அதிகாலை 4 மணிக்கு மேல் ஓசூர் - பெங்களுரு மற்றும் தமிழக நகரங்களுக்கு இடையே வழக்கமான முறையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓடத் தொடங்கின. இந்த இரவு நேர ஊரடங்கு காரணமாக பயணிகள் மற்றும் பேருந்துகள் இன்றி ஓசூர் பேருந்து நிலையம் இரவு முழுவதும் வெறிச்சோடிக் காணப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x