Published : 21 Apr 2021 03:01 PM
Last Updated : 21 Apr 2021 03:01 PM
தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை புதுச்சேரியில் சரிந்துள்ளது. இதற்கான காரணம் குறித்து துணைநிலை ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார்.
புதுவையில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த 11-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை 100 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
இதுவரை 1.74 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக, பொதுமக்கள் எண்ணிக்கை மிகவும் சரிந்துள்ளது.
சுகாதாரத்துறை தரப்பில் விசாரித்தபோது, "புதுச்சேரியில் 75 நாட்களாக சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தியும் இதுவரை 30 ஆயிரத்து 473 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். முன்களப் பணியாளர்களுக்கு 63 நாட்களாக தடுப்பூசி செலுத்தப்பட்டு இதுவரை 18 ஆயிரத்து 128 பேருக்கு ஊசி போட்டுள்ளோம். பொதுமக்களுக்கு கடந்த 47 நாட்களாக ஊசி போட்டு இதுவரை 1.09 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது"என்று தெரிவித்தனர்.
முக்கியமாக, பொதுமக்களில் கடந்த 16-ம் தேதி 7 ஆயிரத்து 432பேர் தடுப்பூசி செலுத்தினர். கடந்த 17-ம் தேதியன்று 4 ஆயிரத்து 978 பொதுமக்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். 18-ம் தேதி முதல் இந்த எண்ணிக்கை மிக குறைந்தது. குறிப்பாக, கடந்த 18-ம் தேதி 1,404 பேரும், 19-ம் தேதி 1,465 பேரும், நேற்று 960 பேரும்தான் தடுப்பூசி எடுத்துள்ளனர். அதேபோல், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் தடுப்பூசி எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது.
தடுப்பூசி பேடுவதை அதிகரிக்க நடமாடும் குழுவினர் ஆங்காங்கே சென்று தடுப்பூசி போட்டு வருகின்றனர். தடுப்பூசி போட மக்களிடையே ஆர்வம் குறைந்துள்ளது சுகாதாரத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தடுப்பூசி தூதுவராக இருக்க விரும்பியவர் விவேக்
இது குறித்து, துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "நடிகர் விவேக் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால் உயிரிழக்கவில்லை. அப்படி தவறான தகவல் பரப்புவதை அவரின் ஆன்மாவே ஏற்காது. அவர் தடுப்பூசியின் தூதராக இருக்க விரும்பினார். புதுச்சேரியில் தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை தொடக்கத்தில் அதிகமாக இருந்தது. ஆனால், தடுப்பூசி பற்றி தவறான புரிதல், வதந்திகளால் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறைந்துள்ளது. அந்த அவநம்பிக்கையை அனைவரும் போக்குவது அவசியம். முகக்கவசம், தடுப்பூசி தூதுவர்களாக அனைவரும் மாறுவது அவசியம்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT