Published : 21 Apr 2021 12:43 PM
Last Updated : 21 Apr 2021 12:43 PM
ஜிப்மர், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடா என சுகாதாரத்துறை விசாரிக்கும் என்று, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று (ஏப்.21) பாரதிதாசன் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"புதுச்சேரியின் தமிழ்த்தாய் வாழ்த்து தந்தவர் பாரதிதாசன். அவரது பாடல்தான் எனது செல்போனின் அழைப்பு இசையாக உள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிக அளவாக இருப்பதால் புதுச்சேரி முழுக்க வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலாகிறது. கரோனா தொற்றாளர்களுக்காக தனியார் ஆம்புலன்ஸ் சேவை, கோவிட் கேர் சென்டர் ஆகியவை செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஆக்சிஜன் போதிய அளவு உள்ளது.
முழு ஊரடங்கு குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, புதுச்சேரியில் வார இறுதி நாள் முழு ஊரடங்கு என முடிவு எடுத்துள்ளோம்.
ரெம்டெசிவர் மருந்து, ஜிப்மர், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இல்லை என்ற தகவல் வந்ததால் சுகாதாரத்துறைச் செயலாளர் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளேன். அவர்களுக்குத் தேவைப்பட்டால் புதுச்சேரி அரசு உதவும்.
உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரி சுகாதாரத்துறையில் உள்ளன. ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களுக்குத் தேவையான அரிசியைக் கடந்த காலத்தில் போல் வழங்குவது தொடர்பாக ஆராயப்படும். ஊரடங்கு தொடருமா என்பது பற்றி தற்போது முடிவு எடுக்க முடியாது. சூழலை ஆராய்ந்து முடிவு எடுப்போம்".
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT