Published : 21 Apr 2021 10:11 AM
Last Updated : 21 Apr 2021 10:11 AM
புதுக்கோட்டையில் பாம்புக் கடியால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
புதுக்கோட்டை திருவப்பூர் கோட்டை காலனியை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் அருளானந்த ஜெரோம் (14), மகள் டெல்பின் ஜொவிதா(8). இவர்கள் 2 பேரும் ஏப். 10-ம் தேதி இரவு தங்களது வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது, வீட்டுக்குள் புகுந்த கண்ணாடி விரியன் எனும் பாம்பு 2 பேரையும் கடித்துள்ளது. இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் 2 பேரும் அனுமதிக்கபட்டனர்.
மருத்துவர்கள் வசந்த்குமார், ஆசைதம்பி, ஜோதி, ஆனந்த், கார்த்திகேயன், டேனியல் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினர் பரிசோதித்தனர். இருவருக்கும் ரத்தம் உறையும் தன்மை குறைந்திருந்ததோடு, நரம்பு மண்டலம் கடுமையாக பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
பின்னர், இருவருக்கும் விஷ முறிவு மருந்து அளிக்கப்பட்டது. இருப்பினும், நரம்பு மண்டல பாதிப்பின் காரணமாக 2 பேருடைய நுரையீரலானது செயல்பட முடியாத நிலைக்கு சென்றுவிட்டது.
தொடர்ந்து பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்படத் தொடங்கியதால் வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
மருத்துவக்குழுவினரின் தீவிர சிகிச்சையின் காரணமாக 5 நாட்களுக்குப் பிறகு மூச்சுத் திணறல் சீரானதையடுத்து செயற்கை சுவாசம் படிப்படியாக நீக்கப்பட்டது.
2 வார தொடர் சிகிச்சைக்குப் பின்பு அருளானந்த ஜெரோம் மற்றும் டெல்பின் ஜொவிதா ஆகியோர், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நேற்று (ஏப். 20) வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியை உரிய நேரத்தில் விரைவாக தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதி பாராட்டினார்.
அப்போது, மருத்துவக் கண்காணிப்பாளர் ராஜ்மோகன், துணை முதல்வர் கலையரசி, நிலைய மருத்துவர் இந்திராணி, தலைமை மயக்க மருத்துவர் கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இது குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் மு.பூவதி கூறுகையில், "பாம்புக்கடியால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, நுரையீரல் இயங்க முடியாத சூழலுக்கு சென்றபிறகும்கூட உயிருக்கு போராடிய சிறுவர், சிறுமியை தீவிர முயற்சியால் காப்பாற்றிய மருத்துவர் குழுவினரின் செயல் பாராட்டுதலுக்கு உரியது.
இதற்கு, தனியார் மருத்துவமனைகளில் சில லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால், இங்கு தமிழக முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டுள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT