Published : 15 Dec 2015 08:26 AM
Last Updated : 15 Dec 2015 08:26 AM
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்து தவிக்கும் வாடகைதாரர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் சிலர் நவம்பர் மாத வாடகையை ரத்து செய்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகள் சேதமடைந்தன.
இதை கருத்தில் கொண்டு சில வீட்டு உரிமையாளர்கள், தங்கள் வீடுகளில் வாடகைக்கு தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு 2 மாதங்கள் வரை வீட்டு வாடகையை ரத்து செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஜாபர் கான்பேட்டையைச் சேர்ந்த ஜெயந்தன் கூறும்போது, “நான் வாடகைக்கு வசித்து வந்த வீடு வெள்ளத்தில் மூழ்கியது. எனது உடைமைகள் அனைத்தும் இன்று தெருவில் குப்பைகளாக கிடக்கின்றன. இதை சரிசெய்ய எனக்கு குறைந்தது ரூ.1 லட்சத்துக்கு மேல் தேவைப்படுகிறது. இதுபற்றி அமெரிக்காவில் வசிக்கும் என் வீட்டின் உரிமையாளர் ஜி.சரவணனுக்கு, மின்னஞ்சல் அனுப்பினேன். எனது நிலையை கருத்தில் கொண்டு, 2 மாதங்களுக்கு வாடகையை செலுத்த தேவை யில்லை என்று மின்னஞ்சலில் அவர் பதில் அளித்துள்ளார். வீழ்ந்து எழும் நிலையில் உள்ள எனக்கு, இது பேருதவியாக இருக்கிறது” என்றார். இதேபோன்று பெரம்பூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் தனது வீட்டில் வாடகைக்கு இருந்தவரிடம் ஒரு மாத வாடகையை செலுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஜாபர்கான்பேட்டையில் வாடகைக்கு வசிக்கும் மெக்கானிக் ஆர்.புருஷோத்தமன் கூறும்போது, “எனது வீட்டின் உரிமையாளர் இந்த மாத வாடகையை செலுத்த சிறிது அவகாசம் அளித்துள்ளார்” என்றார். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டு உரிமையாளர் கூறும்போது, “எனக்கும் வாடகையை செலுத்த வேண்டாம் என்று கூற ஆசைதான். ஆனால் வீட்டு வாடகைதான் எனக்கு வருமானம். அதை இழந்தால் எனது வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் எனது வாடகை தாரரிடம், ஒரு மாதம் கழித்து வாடகையை செலுத்துமாறு கூறியிருக்கிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT