Last Updated : 29 Dec, 2015 02:49 PM

 

Published : 29 Dec 2015 02:49 PM
Last Updated : 29 Dec 2015 02:49 PM

புதுச்சேரியில் பட்டா மாற்றம் செய்ய ஆண்டுக் கணக்கில் காத்திருக்கும் அவலம்



தமிழகத்தை போல் எளிய நடைமுறை இல்லாததால் அவதி

*

பட்டாமாற்றம் செய்ய புதுச்சேரி, காரைக்காலில் ஏராளமானோர் ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது. தமிழகத்தைபோல் எளிய நடைமுறை இல்லாததாலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படாததாலும் ஏராளமா னோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டாமாற்றம் தொடர்பான பிரச்சினை தொடர்பாக “தி இந்து” உங்கள் குரலில் வாசகர்கள் புகார்கள் தெரிவித்திருந்தனர். அதன் விவரம்:

“புதுச்சேரியில் 4 பிராந்தியங்கள் உள்ளன. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் புதிய மனைப்பிரிவுகளில் கட்டப்படும் வீடுகளுக்கு கடன் வசதி, கட்டட அனுமதி உட்பட பல தேவைகளுக்காக கிரையம் செய்யப்படும் மனைப்பிரிவுகளுக்கு பட்டா பெற வேண்டியது அவசியம். அதேபோல் பூர்வீக குடும்ப சொத்துகளை குடும்ப உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுக்கும் நடைமுறை உள்ளது.

அவ்வாறு பாகப்பிரிவினை செய்யப்படும் சொத்துகளுக்கு சம்பந்தப்பட்டோர் விண்ணப்பித்து பட்டா பெற வேண்டும். ஆனால், புதுச்சேரியில் பட்டா மாற்றம் அவ்வளவு எளிதான முறையில் கிடைப்பதில்லை. பட்டாமாற்றம் செய்துதர நடைமுறையில் புதுச்சேரிக்கும், தமிழகத்துக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

உதாரணமாக தமிழகத்தில் சொத்துகளை உட்பிரிவு செய்து பட்டா பெற தாசில்தாரிடம் ஒப்புதல் பெற்று தலைமையிட சர்வேயரிடம் நேரடியாக விண்ணப்பிக்கின்றனர். அந்த மனு ஓரிரு நாளில் அந்தந்த பிர்கா சர்வேயரிடம் கொடுக்கப்படும். அதையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் கலந்தாய்வு நடத்தி நில அளவை செய்து சர்வேயரே பட்டா மாற்றி தாசில்தாரிடம் கையெழுத்து பெற்று தருவார். சர்வே எண் முழுவதும் ஒரே பட்டாவாக இருந்தால் விரைவாக பெற முடியும்.

புதுச்சேரியில் ஒருவர் தனிப்பட்டா பெற அதிக காலதாமதமாகிறது. மனுதாரருக்கு பட்டா கிடைக்க ஆண்டுக்கணக்கில் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.

நில அளவைத்துறை இயக்குநரிடம் மனு தந்தால் வருவாய் தாசில்தார், துணை தாசில்தார், நில அளவைத்துறை உதவி இயக்குநர், நில அளவையர் என மாறி, மாறி கோப்புகள் செல்கிறது. பட்டாமாற்றம் வேண்டி மனு தந்து விட்டு ஆண்டுக்கணக்கில் காத்து கிடக்கும் சூழலுடன் சம்பந்தப்பட்ட அலுவலங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. தமிழகத்தை போன்று சிறப்பு முகாமும் இங்கு நடத்துவதில்லை." என்று குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு பணியாளர்கள் தரப்பில் விசாரித்தால், “அரசு அலுவலகங்களில் பணிகளை விரைந்து முடிக்க கணினி மயமாக்கலை அரசு அறிமுகம் செய்தது. அது முழுமையாக நில அளவைத்துறையில் பயன்படுத்தப்படவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப பட்டா மாற்றம், உட்பிரிவு செய்ய விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விரைந்து பட்டா பெற அரசுதான் சிறப்பு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றனர்.

இதுதொடர்பாக அரசு உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “நிலப்பதிவு விவரங்கள் கணினிமயமாக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. தேசிய நிலப்பதிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கணினிமயமாக்கல் பணி தற்போது விரைவாக நடந்து வருகிறது. இப்பணி நிறைவடைந்தால் பட்டா பெறுவதில் காலதாமதம் இருக்காது” என்று குறிப்பிடுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x