Published : 20 Apr 2021 08:08 PM
Last Updated : 20 Apr 2021 08:08 PM
தேனி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லையில் இ-பாஸ் மற்றும் மருத்துவப் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளா செல்ல முடியாமல் பலரும் தமிழகத்திற்கு திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தில் உள்ள குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு பாதைகள் கேரளாவின் எல்லைப் பகுதியாக அமைந்துள்ளது. இதன் வழியே தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், விவசாயிகள், சுற்றுலாப் பயணிகள்,வியாபாரிகள் பலரும் சென்று வருகின்றனர்.
கடந்த சில நாட்கள் வரை இப்பகுதியில் பெரியளவில் கட்டுப்பாடுகள் இல்லை. பெயர், ஆதார் உள்ளிட்ட விவரங்களை பதிவேடுகளில்பதிவு செய்த பின்பு இவர்கள் அனுமதிக்கப்பட்டனர். தற்போது கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டம் மற்றும் தமிழக எல்லையில் உள்ள தேனி மாவட்டத்திலும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
மாநிலங்களைக் கடந்து செல்பவர்களால் இதன் தாக்கம் உயர்ந்துள்ளது என்று கூறி இன்று முதல் இப்பகுதியில் இருமாநில அதிகாரிகளும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளனர்.
கம்பம்மெட்டு பகுதி வழியே கேரளா செல்பவர்களிடம் இ-பாஸ் மற்றும் கரோானா பரிசோதனை சான்றிதழும் கேட்கப்படுகிறது. இவற்றை சரிபார்த்த பிறகே கேரளாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதே போல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களிடமும் தமிழக போலீஸார் இதே முறையைப் பின்பற்றுகின்றனர்.
இன்று காலை 6 மணிக்கு தோட்ட தொழிலாளர்கள் கேரளாவிற்குள் அனுமதிக்கப்பட்டனர். மாலையில் தமிழகம் திரும்பும்போது நாளை (புதன்) முதல் இ-பாஸ், கரோனா பரிசோதனை செய்திருந்தால் மட்டுமே அனுமதிப்போம் என்று கூறியுள்ளனர்.
இருச்சக்கர வாகனத்தில் வந்த பலரையும் கேரள போலீஸார் தமிழகப்பகுதிக்கே திருப்பி அனுப்பினர். மேலும் நடந்து செல்பவர்களிடமும் இதே கண்டிப்பைக் காட்டினர்.
இதுகுறித்து கம்பம்மெட்டு எல்லையில் பணியில் உள்ள கேரள போலீஸாரிடம் கேட்டபோது இப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ், கரோனா பரிசோதனை இன்றி கேரளாவிற்குள் வர முடியாது என்றனர்.
இதே போல் குமுளி, போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளிலும் கெடுபிடிகள் அதிகமாகி உள்ளது. எனவே நேற்று முதல் இப்பகுதியில் போக்குவரத்து வெகுவாய் குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT