Published : 20 Apr 2021 08:16 PM
Last Updated : 20 Apr 2021 08:16 PM
பூனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழகத்தில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. பல மாவட்டங்களில் தடுப்பூசி போட வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தடுப்பூசி போடுவதில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததால் தடுப்பூசிகள் வீணாவதில் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் உள்ளது. தடுப்பூசிகள் பற்றாக்குறை உள்ள நிலையில் இன்று 6 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்தன.
பூனேவில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சுமார் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை கொண்டு வரப்பட்டன. தடுப்பூசி மருந்துகளைச் சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து குளிர்சாதன வாகனம் மூலம் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு மருந்துகள் வைக்கப்படும்.
பின்னர் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT