Published : 20 Apr 2021 07:37 PM
Last Updated : 20 Apr 2021 07:37 PM
இரவு நேரப் பொது ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவற்றிலிருந்து எந்தெந்தத் தொழிற்சாலைகளுக்கு விலக்கு என்பது குறித்து தமிழக அரசு விளக்கமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஏப். 20) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் இரவு நேரப் பொது ஊரடங்கு அமல்படுத்தவும், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தவும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசாணை (நிலை) எண்.346, நாள் 18.4.2021இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசாணையில் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கும் மற்றும் தொடர் செயல்முறை தொழிற்சாலைகளுக்கும் இரவு நேரப் பொது ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவற்றிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
கோவிட் - 19 தொற்றுநோய் பரவுதலைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை விதிக்கும் அதே வேளையில், மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க அரசு உறுதி பூண்டுள்ளது. மேலும், முக்கிய சேவைகள் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டுள்ளது.
தளர்வுகள் மற்றும் தெளிவுபடுத்தலுக்கான பல்வேறு கோரிக்கைகளை கவனமாகப் பரிசீலித்த பிறகு, பின்வரும் தளர்வுகள்/ தெளிவுரைகள் வழங்கப்படுகின்றன.
இரவு நேரப் பொது ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகியவற்றின்போது, பின்வருவனவற்றுக்கு கூடுதலாக தளர்வுகள் அனுமதிக்கப்படும்
(1) தொலைத்தொடர்பு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள்
(2) தகவல்தொடர்பு / தகவல் தொடர்பான சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் பணியாளர்கள் இரவு நேரப் பணி அமர்வுக்கு அலுவலகத்திலிருந்து செயல்படுதல்.
(3) மருத்துவ, நிதி, போக்குவரத்து மற்றும் பிற முக்கியமான சேவைகளின் பின்தளச் செயல்பாடுகளை ஆதரிக்க, தரவு மையங்கள் மற்றும் பிற முக்கியமான தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளின் பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள்.
(4) பொருட்களை ஏற்றுதல், இறக்குதல் மற்றும் சேமித்தல் உள்ளிட்ட கிடங்கு நடவடிக்கைகள்.
(5) விலக்கு அளிக்கப்படாத பிற தொழிற்சாலைகளைப் பொறுத்தவரையில், தீ பாதுகாப்பு, இயந்திரப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக, தேவையான அத்தியாவசிய பராமரிப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும்.
தெளிவுரைகள்
1. அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் பின்வருவனவற்றைக் குறிக்கும்.
(அ) மருந்துகள், மருந்துருவாக்கிகள், துப்புரவு பொருட்கள், ஆக்சிஜன், மருத்துவ சாதனங்கள், மருத்துவ ஜவுளி, அவற்றின் மூலப்பொருட்களுக்கான கூறுகள் மற்றும் அவற்றின் இடைநிலைகள் ஆகியவற்றுக்கான உற்பத்தி அலகுகள்.
(ஆ) கோழி, செல்லப்பிராணிகள் வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட உணவு தொடர்பான / உணவு பதப்படுத்தும் தொழில்கள்.
(இ) உரங்கள், விவசாய இயந்திரங்கள் மற்றும் அவற்றின் கூறுகள் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உற்பத்தி அலகுகள்
(ஈ) அனைத்து ஏற்றுமதி தொழிற்சாலைகள்/ நிறுவனங்கள், ஏற்றுமதி பொறுப்புறுதிகள் அல்லது ஏற்றுமதி ஆணைகள் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் அத்தகைய தொழில்களுக்கு உள்ளீடுகளை உற்பத்தி செய்யும் துணை நிறுவனங்கள்
(உ) பாதுகாப்புத் துறைக்கு கூறுகள் / உபகரணங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்
(ஊ) பாதுகாப்பு, வேளாண்மை மற்றும் சுகாதாரத் துறைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் கூறுகளின் உற்பத்தி தொழிற்சாலைகள்
(எ) மேலே உள்ள அனைத்து வகைகளுக்கும் பேக்கேஜிங் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள்
2. தொடர் செயல்முறை தொழிற்சாலைகள்
(அ) சுத்திகரிப்பு நிலையங்கள்
(ஆ) பெரிய எஃகு ஆலைகள்
(இ) பெரிய சிமென்ட் ஆலைகள்
(ஈ) வண்ணப்பூச்சுகள் உள்ளிட்ட தொடர் செயல்முறை வேதியியல் தொழிற்சாலைகள்
(உ) சர்க்கரை ஆலைகள்
(ஊ) உரங்கள்
(எ) மிதவை கண்ணாடி ஆலைகள்
(ஏ) தொடர் செயல்முறையுடன் கூடிய பெரிய வார்ப்பாலைகள்
(ஐ) டயர் உற்பத்தி தொழிற்சாலைகள்
(ஒ) பெரிய காகித ஆலைகள்
(ஓ) மொபைல் போன்கள் மற்றும் நுகர்வோர் மின்னணு தயாரிப்புகள் உள்ளிட்ட Surface Mount Technology-ஐ பயன்படுத்தும் மின்னணு தொழிற்சாலைகள்
(ஔ) பெரிய வார்ப்பாலைகள், பெயின்ட் கடைகள் அல்லது பிற தொடர்ச்சியான செயல்முறைகளைக் கொண்ட ஆட்டோமொபைல் உற்பத்தி தொழிற்சாலைகள்
(ஃ) தொடர்ச்சியான ஒருங்கிணைந்த பெரிய ஜவுளி தொழிற்சாலைகள்
அனைத்துத் தொழில்களும் பின்வரும் கோவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றுமாறு வலியுறுத்தப்படும்.
i. போக்குவரத்து மற்றும் உணவு உண்ணும்போது கடைத் தளத்தில் போதுமான தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல்.
ii. முகக்கவசங்களின் பயன்பாடு
iii. பணியாளர்களின் சுகாதாரக் கண்காணிப்பு
iஎ. தடுப்பூசி போடுவதை ஊக்குவித்தல்
எ. தேவையான கிருமிநாசினி மற்றும் சுகாதார நடவடிக்கைகள்
பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT