Published : 20 Apr 2021 04:04 PM
Last Updated : 20 Apr 2021 04:04 PM

ஆலோசனை கொடுத்தால் முன்னாள் பிரதமர் என்றும் பாராமல் அவமரியாதையாக பதிலளிப்பதா? -ஹர்ஷவர்தனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை

“தடுப்பூசி குறித்து மன்மோகன் சிங் கடிதம் மூலம் ஆலோசனை சொன்னால் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், பதில் கடிதத்தில் தரம் தாழ்ந்து மலிவான அரசியல் உள்நோக்கத்தோடு எழுதியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மன்மோகன் சிங் கூறிய யோசனையை நாட்டு மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். அதற்கு சமூக ஊடகங்களில் பதிவானவையே சாட்சிகளாக இருக்கின்றன” என கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இன்று (20.4.2021) சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:

“முன்னாள் பிரதமர், பொருளாதாரப் பேரறிஞர் மன்மோகன் சிங் கரோனா தொற்று காரணமாக அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்கிற செய்தி மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. 88 வயதான அவர் விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென கோடிக்கணக்கான இந்திய மக்களின் சார்பாக இறைவனை வேண்டுகிறேன்.

இந்தியாவின் நிதியமைச்சராகவும், 10 ஆண்டுகள் பிரதமராகவும் பொறுப்பேற்று, புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத்தி, இந்திய நாட்டை, உலக நாடுகளுக்கு இணையாக வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றவர் டாக்டர் மன்மோகன் சிங்.

உலகத் தலைவர்களிடையே நன்மதிப்பைப் பெற்ற டாக்டர் மன்மோகன் சிங் சமீபத்தில் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நிறைவேற்ற வேண்டுமென்று கோரினார். அதில், தடுப்பூசி தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார். இக்கோரிக்கை உள்ளிட்ட சிலவற்றை மத்திய அரசு உடனே நிறைவேற்றியிருக்கிறது.

மேலும், அவர் கூறிய யோசனைகளை நிறைவேற்றுவதற்கு மத்திய பாஜக அரசு முயல வேண்டும். ஆனால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மன்மோகன் சிங்குக்கு எழுதிய பதில் கடிதத்தில், தரம் தாழ்ந்து மலிவான அரசியல் உள்நோக்கத்தோடு எழுதியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மன்மோகன் சிங் கூறிய யோசனையை நாட்டு மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள். அதற்கு சமூக ஊடகங்களில் பதிவானவையே சாட்சிகளாக இருக்கின்றன.

நேற்றைய நிலவரப்படி ஒரே நாளில் 2 லட்சத்து 57 ஆயிரம் பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1757 பேர் இறந்திருக்கிறார்கள். நாடு முழுவதும் ஒன்றரை கோடி மக்கள் கரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். ஆனால், அதேநேரத்தில் ஒருநாளைக்கு 35 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டிருந்த நிலையில் அது 12 லட்சமாக நேற்று குறைந்திருக்கிறது. இது ஏற்கெனவே போடப்பட்ட எண்ணிக்கையை விட 18 லட்சம் குறைவாகும். அதற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை.

இந்தியாவில் இதுவரை 100 பேரில் 9 பேருக்குதான் ஏப்ரல் 18 நிலவரப்படி தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. ஆனால், உலக சராசரி 12 ஆக இருக்கிறபோது, இந்தியாவில் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கிறது. 135 கோடி மக்கள் வாழ்கிற நாட்டில் 10 சதவிகிதத்தினருக்குக் கூட தடுப்பூசி போடப்படாதது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

இரண்டு முறை தடுப்பூசி போட்டவர்கள் மக்கள் தொகையில் 1.5 சதவிகிதம் ஆகும். இன்றைக்கு 18 வயது உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால், தடுப்பூசி உற்பத்தியை உயர்த்தியிருக்கிறார்களா என்று பார்க்கிறபோது, அதற்கான முயற்சியில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.

இந்தியாவில் இரண்டு தனியார் நிறுவனங்களிடமிருந்து தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியை மாதத்திற்கு 10 கோடி இலக்கை மே மாதத்திலிருந்து செய்வதாக உறுதி கூறியிருக்கிறது. அதேபோல, கோவாக்சின் தடுப்பூசி தயாரிக்கிற பாரத் பயோடெக் நிறுவனம் மாதத்திற்கு 1 கோடி உற்பத்தி செய்ய முடியும் என்று கூறியிருக்கிறது.

இந்த இரண்டு நிறுவனங்களும் அரசிடமிருந்து நிதியுதவி கோரியிருக்கிறார்கள். அதற்கு மத்திய அரசு ரூ.4500 கோடி ஒதுக்கியிருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களைத் தவிர, உள்நாட்டில் தயாரிப்பு மூலமாகவோ அல்லது வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமோ தடுப்பூசி விநியோகம் செய்வதை அதிகரிக்க வேண்டும்.

மேலும் 40 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டுமென்றால் தற்போது இருக்கிற நிலையில் 8 மாதங்களாகும். 60 சதவிகித மக்களுக்குத் தடுப்பூசி போட 13 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த இலக்குகளை அடைய வேண்டுமானால் போர்க்கால அடிப்படையில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைளையும் மக்கள் ஒத்துழைப்போடு நிறைவேற்ற வேண்டும். இதற்கு எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். பொது ஊரடங்கு என்பது கரோனா ஒழிப்பிற்குத் தீர்வாகாது என்பது கடந்த கால அனுபவமாகும். கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பொது ஊரடங்கினால் மக்கள் வாழ்வாதாரமும், பொருளாதாரப் பேரழிவும் ஏற்பட்டதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், பொருளாதாரச் சீர்குலைவு ஏற்படாமல் கரோனாவை ஒழிக்க ஒரே வழி, 18 வயது நிரம்பிய அனைவருக்கும் உடனடியாகத் தடுப்பூசி போட வேண்டும்.

இந்தியாவின் பிரதமர் மோடி 135 கோடி மக்களுக்கும் பொதுவான பிரதமராகச் செயல்படவில்லை. கரோனா தொற்று காரணமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொறுப்புணர்ச்சியோடும், மக்கள் நலனில் அக்கறையோடும் மேற்கு வங்கப் பிரச்சாரத்தை ரத்து செய்திருக்கிறார். ஆனால், பாஜகவின் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அனைத்துத் தலைவர்களும் பல நாட்களாக மேற்கு வங்காளத்தில் முகாமிட்டு எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள்.

ஆனால், அவர்களது முயற்சிகள் வெற்றி பெறாது. இதன் மூலம் பாஜகவுக்கு கரோனா தொற்று பரவக் கூடாது என்பதை விட, தேர்தல் பிரச்சாரத்தின் மூலம் ஆதாயம் தேடுகிற நோக்கம் தான் மிஞ்சியிருக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x