Published : 20 Apr 2021 03:31 PM
Last Updated : 20 Apr 2021 03:31 PM

உதகை படகு இல்லத்தில் படகு ஓட்டுநர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

படகு ஓட்டுநர்கள் உள்ளிருப்புப் போராட்டம்.

உதகை

உதகை படகு இல்லம் மூடப்பட்ட நிலையில், தங்களுக்கு மாற்று வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தரக் கோரி உள்ளிருப்புப் போராட்டத்தில் படகு ஓட்டுநர்கள் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் படகு இல்லமும் ஒன்று. ஆண்டுக்கு 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய துடுப்புப் படகு, மோட்டார் படகு, மிதிபடகு என 3 விதப் படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், மோட்டார் படகு மற்றும் துடுப்புப் படகுகள் அனுபவம் வாய்ந்த படகு ஓட்டுநர்களைக் கொண்டு இயக்கப்பட்டு வரும் நிலையில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று (ஏப்.20) காலை முதல் படகு இல்லமும் மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, படகு ஓட்டுநர்களாகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் படகு ஓட்டுநர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் வேலையின்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கின்போது தங்களுக்கு தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகம் ரூ.4,500 மட்டுமே வழங்கியதாகவும், தற்போது மீண்டும் படகு இல்லம் மூடப்பட்ட நிலையில் படகு இல்ல மேலாளர் மற்றும் மண்டல மேலாளர் என, எந்த அதிகாரியும் தங்களைச் சந்திக்காமல் அலைக்கழித்து வருவதுடன் வாழ்வாதாரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் அலைக்கழிப்பதாகவும் கூறி இன்று உதகை படகு இல்ல வளாகத்தில் படகு ஓட்டுநர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த படகு ஓட்டுநர்கள், படகு இல்ல மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி தொடர்ந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்..

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் கூறுகையில், "உதகை படகு இல்லத்தில் 42 பேர் படகு ஓட்டுநர்களாகத் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். 2003-ம் ஆண்டு படகு ஓட்டுநர்கள் டிரிப் அடிப்படையில் படகு ஓட்ட ஒப்புக்கொண்டு பணிபுரிகின்றனர். படகு இல்லம் மூட அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இவர்களுக்கு எப்படிப் பணி வழங்க முடியும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x