Published : 20 Apr 2021 02:40 PM
Last Updated : 20 Apr 2021 02:40 PM

சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கோவிட் உதவி மையம்

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் கரோனா தொற்று பெருகிவரும் நிலையில், காங்கிரஸ் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி இன்று (ஏப். 20) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:

"தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று 11 ஆயிரத்தை நெருங்கியது. 44 பேர் ஒரே நாளில் உயிரிழந்திருக்கிறார்கள். மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 10 லட்சத்தைத் தாண்டி விட்டார்கள். இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் பழுதால் 4 நோயாளிகள் பலியான செய்தி மிகுந்த வேதனையை தருகிறது.

மாவட்டத்திற்கு ஒரு மருத்துவமனை திறப்பதில் அக்கறை காட்டிய அதிமுக அரசு, ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் தீவிரம் காட்டாததன் விளைவே இத்தகைய இறப்புகளாகும். இன்றைக்கு மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகள் அல்லல்படுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதை அதிமுக அரசு அலட்சியப் போக்குடன் கையாண்டு வருகிறது.

தமிழக மக்கள் கரோனாவின் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிற நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் சோனியா காந்தி அறிவுறுத்தலின்படி, சென்னை சத்தியமூர்த்தி பவனில் 'தமிழ்நாடு காங்கிரஸ் கோவிட் உதவி மையம்' தொடக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த மையத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் மருத்துவர்கள் மற்றும் சிலரைக் கொண்ட குழு விரைவில் அமைக்கப்படும்.

இக்குழுவினர் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பு கொண்டு அவர்கள் உரிய சிகிச்சை பெறுவதற்கு உதவி செய்வார்கள். குறிப்பாக சசிகாந்த் செந்தில், தமிழ்நாடு காங்கிரஸ் மருத்துவ பிரிவு தலைவர் கலீல் ரஹ்மான் மற்றும் மருத்துவக் குழுவினர் முன்னின்று இப்பணியை செய்வார்கள்.

பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி மைய தொடர்பு எண்: 9884466333".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x