Published : 20 Apr 2021 01:46 PM
Last Updated : 20 Apr 2021 01:46 PM

கரோனா 2-வது அலையை எதிர்கொள்ளத் தலைமைச் செயலாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன்

திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

கரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ளத் தமிழகத் தலைமைச் செயலாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, திருமாவளவன் இன்று (ஏப்.20) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா பரவலின் இரண்டாவது அலை இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடும் இதில் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி இல்லாத சூழலில், இடைக்கால அரசின் தலைமைச் செயலாளர் இந்த நிலையை எதிர்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கரோனா முதல் அலையின்போது அதைச் சமாளிப்பதற்கான அனைத்து சுகாதார நடவடிக்கைகளையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது. அதனால் மாநில அரசுகள் கரோனா சோதனைக் கருவிகளைக்கூட நேரடியாக வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டன.

நேற்று பிரதமர் தலைமையில் கூடிய கூட்டத்தில் மாநில அரசுகளே இனி நேரடியாகத் தமக்கான மருத்துவ தேவைகளைக் கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, தமிழகத்துக்குத் தேவையான ஆர்டிபிசிஆர் கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் தடுப்பூசிகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்வதற்கு தலைமைச் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில் தாமதம் செய்யும் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். கரோனா தாக்குதலின் உச்சம் மே மாதத்தில் தான் இருக்குமென்று மருத்துவ வல்லுநர்கள் கணித்துள்ள நிலையில், அதைச் சமாளிப்பதற்கு இம்மாத இறுதிக்குள் பெரும்பாலானோருக்கு தடுப்பூசி போடுவது அவசியம்.

மற்ற மாநிலங்களைப் போலல்லாமல் தமிழகத்தில் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் ஒப்பீட்டளவில் சிறப்பாக உள்ளன. தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக அந்த வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி வழங்க வேண்டும் என்றாலே, சுமார் 3 கோடி தடுப்பூசிகள் நமக்குத் தேவைப்படும். மே 1ஆம் தேதி முதல் மே 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், நம்முடைய தேவை மேலும் அதிகரித்துள்ளது.

எனவே, தமிழக மக்களை கரோனாவிலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான தடுப்பூசிகளை உடனடியாகத் தருவிப்பதும், அவற்றை மாவட்டங்களுக்கு விநியோகம் செய்து ஏப்ரல் 30-க்குள் இலக்கு நிர்ணயித்து அதிகபட்சமாக எவ்வளவு பேருக்குப் போட முடியுமோ அவ்வளவு பேருக்குத் தடுப்பூசியைப் போடச் செய்வதும் தமிழக அரசின் கடமையாகும்.

சுகாதார அவசரநிலை நிலவும் இந்த இக்கட்டான காலத்தில் தனது கடமையைத் தலைமைச் செயலாளர் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x