Last Updated : 20 Apr, 2021 01:29 PM

1  

Published : 20 Apr 2021 01:29 PM
Last Updated : 20 Apr 2021 01:29 PM

மின் விளக்கின்றி இருளில் நிற்கும் தேசத் தலைவர்கள், கவிஞர்கள் சிலைகள்: கண்டுகொள்வாரா புதுவை ஆளுநர்?

ஆளுநர் மாளிகை  மற்றும் சட்டப்பேரவை அருகே இருளில் மூழ்கியுள்ள சிலைகள்.

புதுச்சேரி

ஆளுநர் மாளிகை மற்றும் சட்டப்பேரவைக்கு எதிரேயுள்ள பாரதியார், பாரதிதாசன், டாக்டர் அம்பேத்கர், வஉசி என முக்கியத் தலைவர்களின் சிலைகள், கவிஞர்களின் சிலைகள் மின் விளக்கின்றி இருளில் காட்சியளிக்கும் அவலம் நிலவுகிறது. அதே நேரத்தில் பிறந்த நாள், நினைவு நாள் தொடங்கி பராமரிப்புக்கென பல லட்ச ரூபாய் செலவிடுவதாக அரசு அதிகாரிகள் குறிப்பிட்டும், சிலைகளுக்கான விளக்கே எரியாத சூழல் நிலவுகிறது.

புதுச்சேரியில் மொத்தம் 28 சிலைகள் அரசு பராமரிப்பில் உள்ளன. தேசத் தலைவர்கள், புதுச்சேரி தலைவர்கள் தவிர பிற மாநில அரசியல் தலைவர்களின் சிலைகளும் உள்ளன. சட்டப்பேரவை, ஆளுநர் மாளிகை எதிரே கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன், தேசத் தலைவர்கள் டாக்டர் அம்பேத்கர், வ.உ.சிதம்பரனார் தொடங்கி நகரில் பல தலைவர்களின் சிலைகள் உள்ளன.

சிலை பராமரிப்பு தொடர்பாக அண்மையில் ஆர்டிஐயில் மனுத் தாக்கல் செய்து தகவல் பெற்ற ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி கூறுகையில், "புதுச்சேரியில் உள்ள 28 சிலைகளுக்குக் கடந்த இரு ஆண்டுகளில் பராமரிக்க ரூ.35.46 லட்சத்தைப் பொதுப்பணித் துறை செலவிட்டுள்ளது. தற்போதும் செலவிட்டு வருகிறது. பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகளுக்கு மாலை உள்ளிட்டவற்றுக்காக, கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.8.76 லட்சம் செலவாகியுள்ளது" என்று தெரிவித்தார்.

ஆனால், தற்போது ஆளுநர் மாளிகை எதிரேயுள்ள சிலைகள் தொடங்கி பல சிலைகளும் இருளில் மூழ்கியுள்ளன. துறை அதிகாரிகள் யாரும் முக்கியத் தலைவர்களின் சிலைகளுக்கு விளக்கு வெளிச்சத்தைக் கூட உறுதிப்படுத்தாத சூழல்தான் புதுச்சேரியில் நிலவுகிறது.

இதுகுறித்துப் புதுச்சேரி சிந்தனையாளர் பேரவைத் தலைவரும், பாரதிதாசனின் பேரனுமான செல்வம் கூறுகையில், "புதுச்சேரி நகரில் கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன், தலைவர்கள் டாக்டர் அம்பேத்கர், வ.உ.சிதம்பரனார், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, முன்னாள் முதல்வர் குபேர் உட்பட முக்கியமானவர்களின் சிலைகள் இருட்டில்தான் உள்ளன.

சிலைகளுக்கான விளக்குகள் எரிவதில்லை. பல இடங்களில் தெருவிளக்கு வெளிச்சத்தில்தான் தலைவர்கள், கவிஞர்களின் சிலைகளையே பார்க்க இயலும். ஆளுநர் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x