Published : 20 Apr 2021 11:54 AM
Last Updated : 20 Apr 2021 11:54 AM

நீலகிரியில் விடுதி மாணவர் நிதியில் முறைகேடு: இரு தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

பிரதிநிதித்துவப் படம்.

உதகை

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் உதவித்தொகை மோசடி தொடர்பாக இரு தலைமையாசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 22 அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. பள்ளி மூடப்பட்ட காலங்களில் விடுதியில் தங்கிப் படித்து வந்த பழங்குடியின மாணவர்களின் உணவுக்காகத் தலா ரூ.6,300 மற்றும் உதவித்தொகை ரூ.1,000 என மொத்தம் ரூ.7,300 வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

அந்தப் பணத்தை அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஒவ்வொரு பழங்குடியின மாணவரின் பெயருடன் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் வங்கிக் கணக்கில் செலுத்தி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் அல்லது பெற்றோரின் கையெழுத்தைப் பெற்று அலுவலகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

சில பள்ளிகளில், மாணவர்களுக்கு வந்த பணத்தை அங்கு பணியாற்றும் சமையலர் உட்படச் சிலரின் பேரில் உள்ள வங்கிக் கணக்கில் வரவு வைத்து, தலைமை ஆசிரியர்கள் எடுத்துக்கொண்டதாகப் பழங்குடியினர் நல அலுவலகத்துக்குப் புகார் சென்றுள்ளது.

இதுகுறித்து மாவட்டப் பழங்குடியினர் நல அலுவலர் சுகந்தி பரிமளத்திடம் கேட்ட போது, ''பழங்குடியின மாணவர்களின் உணவுக்காக வழங்கப்பட்ட நிதியில் மோசடி நடந்துள்ளதாக, சில பள்ளிகள் மீது புகார் வந்துள்ளது. இதுகுறித்து மாவட்டத்தில் உள்ள 22 பள்ளிகளிலும் நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழு விசாரணைக்குப் பின், விவரம் தெரிவிக்கப்படும்'' என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், பள்ளி மாணவர்கள் உதவித்தொகையில் லட்சக்கணக்கில் மோசடி நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் பொன்னானி பழங்குடியினர் உண்டு, உறைவிடப்பள்ளி தலைமையாசிரியர்கள் பாக்கியநேசன் மற்றும் சேகர் ஆகியோரைப் பழங்குடியின நலத்துறை அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x