Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM
கரோனா கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் கோவையில் அனைத்து தொழில்நிறுவனங்களும் இரவில் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனதமிழக அரசுக்கு கோவை தொழில் துறையினர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல்தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் இன்று(ஏப்ரல் 20) முதல் கூடுதல் கட்டுப்பா டுகள், தடைகளுடன் கூடிய இரவுநேர ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல் முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. தொழில் நகரமான கோவையில், இந்த இரவு நேர கட்டுப்பாட்டிலிருந்து அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் விலக்கு அளிக்க வேண்டும் என தொழில் துறையினர் சார்பில் தமிழகஅரசுக்கு கோரிக்கை முன் வைக் கப்படுகிறது.
இதுகுறித்து கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு கூறியதாவது:
தொடர் செயல்முறை தொழிற் சாலைகள் என்ற தமிழக அரசின் அறிவிப்பில் கோவையில் உள்ள பவுண்டரி உள்ளிட்ட சில உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே வருகின்றன. ஆனால் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் இதில் வராது. பொது உற்பத்தி நிறுவனங்கள் என்ற அடிப்படையில் தமிழக அரசு அனுமதி வழங்கினாலே கோவையில் உள்ள அனைத்து உற்பத்தி நிறுவனங்களும் இதில் வந்து விடும்.
கோவையை பொறுத்தவரை 1 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இரவு நேர தடை விதிப்பதால், இதை நம்பியுள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை அளித்தாக வேண்டும். இல்லையெனில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்று விடுவார்கள். உற்பத்தியின் அளவு குறையும். உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். பெரிய நிறுவனங்க ளுக்கு உற்பத்தி பொருட்கள் செல்வதில் தாமதம் ஏற்படும். அந்நிறுவனங்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும். தொடர்ச்சியாக பொருளாதார பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு கொடிசியா தலைவர் கூறினார்.
தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) தலைவர் அஷ்வின் சந்திரன்:
சமீபத்தில்தான் ஜவுளி ஆலைகள் இயல்பான உற்பத்தியை அடைந்துள்ளன. இந்நிலையில் இரவு நேரத்தில் ஆலைகளை நிறுத்தி வைத்தல், ஞாயிற்றுக் கிழமைகளில் முற்றிலுமாக நிறுத்துவது ஆகியவற்றால் உற்பத்தியில் சுமார் 75 சதவீதம் பாதிக் கும். தொடர்ந்து ஏற்றுமதி, தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படும். எனவே நூற்பாலை, நெசவு, பின்னலாடை, ஜவுளி பதனிடுதல் மற்றும் ஒருங்கிணைந்த ஜவுளி ஆலைகளை தொடர் செயல்முறை தொழிற்சாலைகளாக சேர்த்து செயல்பட அனுமதிக்க வேண்டும், என்றார்.
டேக்ட் அமைப்பின் மாவட்ட தலைவர் ஜே.ஜேம்ஸ்:
தமிழக அரசின் அறிவிப்பு, கோவையில் உள்ள 10 முதல் 15 சதவீதம் நிறுவனங்கள் மட்டுமேஇரவு நேரத்தில் செயல் படுவதற்கான வாய்ப்பை அளித்துள்ளது. மீதமுள்ள 85 சதவீத நிறுவனங்கள் இரவு நேரத்தில் இழுத்து மூட வேண்டும் என்ற வகையில் உள்ளது. முதல்கட்ட கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் நிலையில், மூலப்பொருட்கள் விலை உயர்வு, அதையடுத்து இரவு நேர கட்டுப்பாடு என்றால் எங்களைப் போன்ற குறுந்தொழில் நிறுவனங்கள் என்ன செய்ய இயலும். எடுத்த ஆர்டர்களை உரியநேரத்துக்குள் முடிக்க முடியாது.எனவே அனைத்து தொழில் நிறு வனங்களையும் கட்டுப்பாடுகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் எங்களது கடன்களுக்கு அரசு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், என்றார்.
தென்னிந்திய பொறியியல் மற்றும் உற்பத்தியாளர் சங்க (சீமா) தலைவர் கார்த்திக்:
கோவையில் உள்ள ஒவ்வொரு தொழில் நிறுவனங்களிலும் அதிக முதலீடு மற்றும் கடன்களுக்கு இயந்திரங்களை வாங்கி வைத்துள்ளனர். இயந்திரங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை ஈட்ட முடியும். கடன்களை திருப்பிச் செலுத்த இயலும். அரசின் இந்த அறிவிப்பு உற்பத்தித் துறையில் சங்கிலித் தொடர் போல் பாதிப்பை ஏற்படுத்தும். அனைத்து தொழில் நிறுவனங்களும் செயல்பட அனுமதிக்க வேண்டும். இரவு 10 மணிக்கு முன்னதாக தொழில் நிறுவனங்களுக்குள் வந்து விட்டு, அதிகாலை 4 மணிக்கு பிறகே வெளியில் செல்ல வேண்டும் என தெரிவிக்கலாம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT