Published : 19 Apr 2021 07:49 PM
Last Updated : 19 Apr 2021 07:49 PM
ஆம்பூர் அருகே குடியிருப்புப் பகுதிகளில் வட்டமடிக்கும் அபூர்வ வகையான வெள்ளை நிறக் காக்கையைப் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மிட்டாளம் கிராமத்தில் கடந்த 2 நாட்களாக வெள்ளை நிறம் கொண்ட காக்கை ஒன்று இரை தேடி அங்கும், இங்கும் பறந்து வட்டமடித்துக் கொண்டிருக்கிறது.
மிட்டாளம் குடியிருப்புப் பகுதிகளில் பறந்து திரியும் இந்த அபூர்வ வகையான காக்கையை அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கின்றனர். சிலர் பழம், தானிய வகைகளை உணவாக வைத்து வெள்ளை நிறக் காக்கையை தங்கள் வீட்டின் அருகே வரவைக்க முயற்சி செய்தனர்.
ஆனால், வீட்டின் மேல் மாடியில் நின்றபடி இரையைத் தேடும் வெள்ளை நிற காக்கை, அங்குமிங்கும் பறந்தபடி கடந்த 2 நாட்களாக வட்டமடித்து வருகிறது. இதுவரை கறுப்பு நிறத்திலேயே காக்கைகளைப் பார்த்த சிறுவர்கள், வெள்ளை காக்கையை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பத்தூர் கால்நடை மருத்துவர் அன்புசெல்வத்திடம் கேட்டபோது, ‘‘பொதுவாக, மனிதர்கள், பறவைகள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிரினங்களிலும் டிஎன்ஏ குறைபாட்டால் ‘அல்பினீசம்’ என்ற நோய் உண்டாகும். இது உடலில் உள்ள தோலின் நிறத்தை மாற்றும். அது போன்றுதான் வெள்ளை நிறக் காக்கையும் டிஎன்ஏ குறைப்பாட்டால் நிறம் மாறியிருக்கும்.
மேலும், ‘மெலனின்’ குறைபாட்டினாலும் தோலில் வெள்ளை நிறம் ஏற்படும். இந்தியாவில் பல மாநிலங்களில் வெள்ளை நிறத்திலேயே காக்கைகள் காணப்படுகின்றன’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT