Published : 19 Apr 2021 07:23 PM
Last Updated : 19 Apr 2021 07:23 PM
மதுரையிலிருந்து கோவை, நாகர்கோவிலுக்கு மாலை 5 மணி வரையே பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார்.
அரசுப் போக்குவரத்து கழக மதுரை கோட்ட மேலாண்மை இயக்குனர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு உத்தரவின்படி கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாளை முதல் இரவு நேர ( இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் மற்றும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்களிலிருந்து இரவில் பேருந்துகள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் அன்று பேருந்து இயக்கப்படாது.
இதையடுத்து நாளை முதல் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து சேலம், கோவை, ஈரோட்டிற்கு மாலை 5 மணி வரையும், கொடைக்கானலுக்கு மாலை 5.45 வரை, திருப்பூர், பொள்ளாச்சிக்கு மாலை 6 மணி வரை, கரூர், கம்பம், பழனிக்கு மாலை 7 மணி வரை, தேனி, பெரியகுளம், திண்டுக்கல்லுக்கு இரவு 8 மணி வரையும், சோழவந்தான் வழியாக நிலக்கோட்டைக்கு இரவு 8.30 மணி வரையும் பேருந்துகள் இயக்கப்படும்.
மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவில், திருச்செந்தூருக்கு மாலை 5 மணி வரையும், ராமேஸ்வரம், தென்காசிக்கு மாலை 6 மணி வரையும், திருச்சி, ராமநாதபுரம், நெல்லைக்கு மாலை 7 மணி வரைம், ராஜபாளையத்துக்கு மாலை 7.30 மணி வரையும், கோவில்பட்டி, சிவகாசிக்கு இரவு 8 மணி வரையும், அருப்புக்கோட்டை, நத்தத்துக்கு இரவு 8.30 மணி வரையும் பேருந்துகள் இயக்கப்படும்.
அரசுப் பேருந்துகளில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்வதை கண்காணிக்க பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து பேருந்து நிலையங்களிலும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யவும், கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பின்வாசல் வழியாக ஏறி முன்வாசல் வழியாக இறங்கி, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT