Published : 19 Apr 2021 07:08 PM
Last Updated : 19 Apr 2021 07:08 PM
திருமண மண்டபங்களில் 50 சதவீத விருந்தினர்களுடன் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக் கோரி ஒலி, ஒளி அமைப்பாளர்கள் மற்றும் பல்வேறு வாடகை பொருட்கள் உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஒலி பெருக்கி மற்றும் ஒளி அமைப்பு உரிமையாளர்கள் நலச்சங்கம், தூத்துக்குடி ஒலி ஒளி அமைப்பாளர்கள் சங்கம் (சிஐடியு), தமிழ்நாடு வாடகை பொருட்கள் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் ஒலி, ஒளி அமைப்புகள் மற்றும் பல்வேறு பொருட்களுடன் இன்று ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விபரம்:
தமிழகம் முழுவதும் ஒலி, ஒளி, ஜெனரேட்டர், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம், மணவரை அலங்காரம் போன்ற தொழில்களை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.
திருமணங்கள், கோயில் விழாக்கள் நடைபெறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் தான் இந்த தொழிலாளர்களுக்கு வேலை இருக்கும்.
கடந்த ஆண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக தொழில் முற்றிலும் நடைபெறவில்லை. இதனால் வருவாய் இழந்து மிகவும் பாதிக்கப்பட்டோம். தற்போது தான் கொஞ்சம் மீண்டு வரும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கரோனா கட்டுப்பாடுகளால் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் போன்றவை 50 சதவீத கொள்ளளவுடன் இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், திருமணம், விழாக்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு 50 சதவீத விருந்தினர்களுடன் திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும். அதுபோல கோயில், தேவாலயம் மற்றும் மசூதி போன்ற இடங்களில் மதசார்ந்த நிகழ்ச்சிகள், திருவிழாக்களை நடத்தவும் அனுமதி அளிக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்கார் சாகுபடி:
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஏரல் தாலுகா தலைவர் எஸ்.வெள்ளச்சாமி மற்றும் செயலாளர் க.சுப்புதுரை ஆகியோர் தலைமையில் ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் பாசன விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விபரம்:
பாபநாசம் அணையில் தற்போது 105 அடியும், மணிமுத்தாறு அணையில் 98 அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த காலங்களில் 70 அடி தண்ணீர் இருக்கும் போதே முன்கார் சாகுபடிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு போதுமான நீர் இருந்தும் இதுவரை முன்கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வரும் 25-ம் தேதிக்குள் முன்கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் 26-ம் தேதி முக்காணி சந்திப்பில் விவசாயிகள் சார்பாக மறியல் போராட்டம் நடத்தப்படும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT