Published : 19 Apr 2021 06:15 PM
Last Updated : 19 Apr 2021 06:15 PM
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் இன்று இந்த தடுப்பூசியைப் போடவந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அதேபோல் ‘கோவேக்சின்’ தடுப்பூசியும் பற்றாகுறையாக உள்ளதாகக் கூறப்படுவதால், முதல் தவணை தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தமிழகத்தில் கரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை வேகமாகப் பரவுகிறது. இந்தத் தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள தடுப்பூசி அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.
இந்தியாவில் ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ தடுப்பூசிகள் புழக்கத்திற்கு வந்ததில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் அதனை உடலில் செலுத்தி வருகின்றனர்.
இந்தத் தடுப்பூசிகளுடைய பக்கவிளைவுகள் பற்றிய வதந்திகள் பரவினாலும் தற்போதும் பயன்பாட்டில் உள்ள இரு தடுப்பூசிகளையும் மக்கள் ஆர்வமாக போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதுமே கரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஆங்காங்கே குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால், மதுரை மாவட்டத்தில் மட்டும் இந்தத் தடுப்பூசிகள் பற்றாக்குறை இல்லாமல் தடுப்பூசித் திருவிழா, மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லாமல் பொதுமக்களுக்கு போடப்பட்டு வந்தது.
மதுரை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்சின்’ தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்படத்தொடங்கியுள்ளது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்களில் ‘ இன்று கோவிஷீல்டு’ தடுப்பூசிகள் இருப்பு இல்லை. இந்தத் தடுப்பூசி முதற்கட்டமாக போட்டுக் கொண்டவர்கள், இன்று 40 நாட்களுக்குப் பிறகு 2வது டோஸ் போடவந்தனர். ஆனால், மருத்துவமனை செவிலியர்கள், தற்போது இந்த தடுப்பூசி இருப்பு இல்லை என்றும், மூன்று, நான்கு நாள் கழித்து வரும்படியும் அவர்களை திருப்பி அனுப்பினர்.
அதுபோல், ‘கோவேக்சின்’ தடுப்பூசியும் பற்றாக்குறையாக உள்ளதால் ஏற்கெனவே இந்தத் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டும் இந்த தடுப்பூசி போடுகின்றனர். புதிதாக போட வருகிறவர்களை திருப்பி அனுப்புகின்றனர்.
ஏற்கெனவே ‘கோவிசீல்டு’ போட்டவர்கள், இரண்டாவது முறை போட வரும்போது அவர்களை இல்லை என்று திருப்பி அனுப்புவதால் அவர்கள் மத்தியில் இந்தத் தடுப்பூசி இரண்டாவது முறை போடாவிட்டால் என்னாகுமோ? நீண்ட நாட்கள் தள்ளிப்போட்டால் தடுப்பூசி போட்டே பயனில்லையோ? போன்ற சந்தேங்களும், அச்சமும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மதுரையில் பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், ‘‘தடுப்பூசி போட வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக மக்களிடம் விழிப்புணர்வு செய்தேன். மக்களும் தற்போது ஆர்வமாக தடுப்பூசி போட்டு வந்தனர். ஆனால், இன்று முதல் அரசு ராஜாஜி மருத்துவமனை மட்டுமில்லாத மற்ற அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி இருப்பு இல்லை. அந்தத் தடுப்பூசி போட வருகிறவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். கோவேக்சினும் பற்றாக்குறை இருப்பதாகக் கூறப்படுகிறது. முதல் தடுப்பூசிக்கும், இரண்டாவது தடுப்பூசிக்கும் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இடைவெளி விட வேண்டும். அது தாமதமானால் அந்த ஊசி போட்டு என்ன பலன் அளிக்குமா? என்பது தெரியவில்லை. கரோனா தொற்று பரவும் இந்த நேரத்தில் வயதானவர்கள், வீட்டை விட்டு வெளியே வந்து, மருத்துவமனைக்கு தடுப்பூசி போட வருவதே பெரிய விஷயம். அவர்களை தடுப்பூசி இல்லை என்று திருப்பி அனுப்புவது வருத்தமளிக்கிறது. அவர்கள் மீண்டும் வந்து தடுப்பூசி போடுவார்களா? என்பது சந்தேகம், ’’ என்றார்.
இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘கோவிசீல்டு இருப்பு இல்லை. ஆனால், கோவேக்சின் இருப்பு உள்ளது. அதில் பற்றாக்குறை ஏற்படவில்லை. தடுப்பூசி சில நாட்கள் தள்ளிப்போடுவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஓரிரு நாட்களில் கோவிசீல்டும் வந்துவிடும், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT