Published : 19 Apr 2021 04:05 PM
Last Updated : 19 Apr 2021 04:05 PM
தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டை ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதற்கான முதல்கட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது இரண்டாம் கட்டப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகச் சிலம்பம் இந்திய சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிலம்பம் இந்திய சங்கப் பொதுச்செயலாளர் நாகராஜ் கூறியதாவது:
''தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க சிலம்பம் கலையைப் பற்றி அகத்தியர் எழுதிய கம்பு சூத்திரம் என்ற நூலில் விலாவாரியாக வரிசைப்படுத்தி எழுதி உள்ளார். சுமார் 12,500 ஆண்டுகளுக்கு முன்பு சிலம்பம் கலை தோன்றியதாக அகத்தியர் வரலாறு மூலமாகத் தெரியவருகிறது. மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இந்த சிலம்பம் கலையும் தோன்றியதாகக் கருத்தில்கொள்ள வேண்டும். ஏனெனில் அனைத்துக் கலைகளுக்கும் இது தாய்க் கலை ஆகும். போர்க் கலைக்கும் இது முதல் கலையாகும்.
காற்று, நீர், நெருப்பு, நிலம், வானம் ஆகிய பஞ்ச பூதங்களும் இந்த சிலம்பத்தில் அடக்கம். சிலம்பம் கற்றவர்கள் உடல் வலிமையும், மன வலிமையும் மிக்கவர்களாக திகழ்ந்தார்கள். ஆகவே மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர் மற்றும் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பூலித்தேவன் வரை அரசர்கள் தங்களுடைய படையில் சிலம்பம் கற்றவர்களைப் போர் வீரர்களாக வைத்திருந்தனர். சிலம்பம் கலையில் இருந்துதான் அனைத்து விளையாட்டுகளும் பிறந்துள்ளன.
வெள்ளையர்கள் நமது நாட்டிற்குள் நுழைந்தபோது இந்த சிலம்பம் போர் முறைக்குப் பயந்து சிலம்பம் கலைக்குத் தடை விதித்தனர். ஆனால் வெள்ளையர்களை ஏமாற்றி நமது முன்னோர்கள் சிலம்பம் கலையை வளர்த்தார்கள். இந்த சிலம்பம் கலையை அழியாமல் பாதுகாக்க வெள்ளையர்களை ஏமாற்றி சிலம்பம் கலையை அலங்கார விளையாட்டாக மாற்றி சிலம்பாட்டம் என்ற பெயரில் ஆடத் தொடங்கியதால் சிலம்பாட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த பாரம்பரியமிக்க சிலம்பம் கலையை அழியாமல் பாதுகாக்கும் வகையில் அதை ஒரு விளையாட்டாக மாற்றுவதற்கு நுணுக்கமான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 1980-ம் ஆண்டு சிலம்பம் கலை, ஒரு விளையாட்டாக மாற்றப்பட்டு முதல் முறையாக சங்கம் ஏற்படுத்தப்பபட்டது. இதற்கு அன்றைய நாளில் தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் அங்கீகாரம் வழங்கினார்.தொடர்ந்து 2016-ம் ஆண்டில் சிலம்பம் தமிழ்நாடு சங்கமும், தேசிய அளவில் சிலம்பம் இந்திய சங்கமும் ஆரம்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சர்வதேச அளவில் மலேசியாவில் 1989-ம் ஆண்டில் குருஜி முருகன் செல்லையா மூலமாக ஆரம்பிக்கப்பட்ட உலக சிலம்பம் சங்கத்துடன் மற்றும் சிங்கப்பூரில் உள்ள சிலம்பம் ஆசியா சங்கத்துடனும் சிலம்பம் இந்திய சங்கம் முறையாக பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து நமது பாரம்பரிய சிலம்பம் விளையாட்டை உலகளவில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் உலக சிலம்பம் சங்க ஒத்துழைப்புடன் ஐ.நா. சபையில் சிலம்பம் இந்திய சங்கம் பதிவு செய்யப்பட்டது. அதன் ஆசிய இந்தியப் பிரதிநிதிகளாக சிலம்பம் இந்திய சங்க நிறுவனத் தலைவர் சந்திரமோகன், தலைவர் பொன்ராமர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் சிலம்பம் விளையாட்டு பங்கேற்க வேண்டுமானால், உலக அளவில் உள்ள அனைத்து விளையாட்டுச் சங்கங்களிலும் அது பதிவு செய்யப்பட வேண்டும்.
அதன்படி தபீஷா உலக விளையாட்டு அரங்கிலும், கொரிய நாட்டிலுள்ள தற்காப்புக் கலை சங்கத்திலும், ரஷ்ய நாட்டிலுள்ள பாரம்பரியக் கலை சங்கத்துடனும், மலேசிய உள்துறை மற்றும் கல்வி அமைச்சகத்திலும், சீனாவில் உள்ள தைபே ஒலிம்பிக் சங்கத்திலும், சர்வதேச மகளிர் விளையாட்டு சங்கத்திலும், ஸ்லோவாக்கியா நாட்டில் 1923-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட உலக விளையாட்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலக அளவிலான அனைத்து விளையாட்டுச் சங்கங்களிலும் உலக சிலம்பம் சங்கம் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலக சிலம்பம் சங்க நிறுவனர் குருஜி முருகன் செல்லையா முயற்சியின் காரணமாக ஒலிம்பிக்கில் சிலம்பம் விளையாட்டை இடம் பெறச் செய்வதற்கான முதல் கட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
மேலும் சிலம்பம் விளையாட்டை இந்திய அளவில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சேர்ப்பதற்கான முயற்சியில் சிலம்பம் இந்திய சங்க நிர்வாகிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். விரைவில் தேசிய விளையாட்டுகளில் சிலம்பம் விளையாட்டும் பங்கு பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கரோனா முடிந்து சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கியபின் மலேசியா நாட்டில், உலக நாடுகளில் உள்ள சிலம்பம் பயிற்சியாளர்கள் கலந்துகொள்ளும் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது. 5 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிப் பட்டறையை, சிலம்பம் இந்திய சங்கத்துடன் மலேசியக் கல்வி அமைச்சகம் இணைந்து நடத்துகிறது''.
இவ்வாறு நாகராஜ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT