Published : 11 Dec 2015 03:44 PM
Last Updated : 11 Dec 2015 03:44 PM

கொடைக்கானலில் தொடர் மழையால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு: உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

கொடைக்கானலில் பெய்துவரும் தொடர் மழையால் சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலும் இல்லாத நிலையில், இவர்களை நம்பி தொழில் செய்துவரும் பல்வேறு தரப்பினரும் வருவாய் இன்றி பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

கொடைக்கானலுக்கு அனைத்து மாதங்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை இருக்கும். இவர்களை நம்பி சிறுகடைகள், தங்கும் விடுதிகள், வாகன ஓட்டுநர்கள், ஏரிச்சாலையில் குதிரை ஓட்டுபவர்கள், சைக்கிள் கடை நடத்துபவர்கள், உணவு விடுதிகள் என பல்வேறு தொழி ல் நடத்துபவர்கள், சுற்றுலா வழி காட்டிகள், தள்ளுவண்டிகளில் கடை நடத்தும் சிறுவியாபாரிகள் என ஆயிரக்கணக்கானோர் வாழ் ந்து வருகின்றனர். தொடர்மழை கார ணமாக இவர்களின் வாழ்வாதாரம் முற்றி லும் பாதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் ஒரு மா தமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் இரவில் கடும் குளிர் நிலவுகிறது. மேலும் மண் சரிவு, மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்துவது என இடையூறுகள் ஏற்படுவதால் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் செல்வதைத் தவிர்க்கின்றனர்.

ஏரியைச் சுற்றியுள்ள உயர்ந்த மரங்களும் சாய்வதால், உள்ளூர் மக்களும் ஏரிப் பகுதியில் நடைபயணம் மேற்கொள்ளத் தயங்குகின்றனர். கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்காவில் வழக்கமாக எப்போதும் கூட்டம் காணப்படும். இதனால் இப்பகு தியில் அதிகளவில் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பெரும்பாலானவை சுற்றுலா பயணிகளின் வருகையின்றி தற்போது அடைக்கப்பட்டுள்ளன.

தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் பெரும்பாலானவை காலியாக உள்ளன. இதனால் சுற்றுலாப் பயணிகளை நம்பி, சிறு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவோரின் நிலை பரிதாபமாக உள்ளது.

இதுகுறித்து கொடைக்கானல் டாக்சி ஓட்டுநர் மற்றும் உரி மையாளர் சங்கத் தலைவர் ஏ. ரமேஷ் கூறியது: சுற்றுலாப் பயணிகள் வருகை முற்றிலுமாக இல்லாததால், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள பலரது வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளது. தினமும் ரூ. 700 வரை வாடகைக்குச் செல்வோம், தற்போது ரூ. 100 கிடைப்பதே அரிதாக உள்ளது. இதனால் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. அன்றாட சாப்பாட்டுக்கே திணறி வருகிறோம். வண்டிக்கு தவணைத் தொகை கட்டவேண்டும். டாக்சி தொழில் மட்டுமின்றி, சுற்றுலாப் பயணிகளை நம்பி தொழில் செய்யும் அனைவரும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். ஒரு மாதத்துக்கும் மேலாக, இந்த நிலை நீடித்து வருகிறது. மழைக்காலத்தை தொடர்ந்து வரும் பனிக்காலத்திலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகம் எதிர்பார்க்க முடியாது என்பதால், பலரும் வாழ்வாதாரத்துக்காக கொடைக்கானலை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x