Published : 19 Apr 2021 01:23 PM
Last Updated : 19 Apr 2021 01:23 PM
கரூர் தொகுதியில் 28 மேசைகளைப் பயன்படுத்தி வாக்கு எண்ணிக்கையை விரைவுபடுத்த வேண்டும் எனக் கரூர் தொகுதி திமுக வேட்பாளரும், திமுக மாவட்டப் பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 3 அடுக்குப் பாதுகாப்பு, 24 மணி நேர சிசிடிவி கேமரா கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகின்றது. திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி முகவர்கள் கண்காணிப்புப் பணியில் உள்ளனர்.
இதற்கிடையே கல்லூரி வளாகத்தில் உள்ள பூட்டப்பட்ட அறை ஒன்றில் நேற்று ஏசி இயங்கியதுடன் சர்வர்கள் செயல்பாட்டில் இருந்துள்ளன. இதனால் சந்தேகமடைந்த திமுகவினர் இதுகுறித்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான பிரசாந்த் மு. வடநேரே, காவல் கண்காணிப்பாளர் சுஷாந்த்சாய் ஆகியோருக்குத் தகவல் அளித்தனர். இதனால் நேற்று இரவு ஆட்சியர் பிரசாந்த மு. வடநேரே, காவல் கண்காணிப்பாளர் சுஷாந்த்சாய் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
வகுப்புகள் முடிந்து சர்வர் மற்றும் ஏசியை அணைக்காமல் சென்றுவிட்டதாகக் கல்லூரி நிர்வாகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக நாளை (இன்று) விசாரணை நடத்தப்படும் எனக்கூறி கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன் அந்த அறையின் சாவியைப் பெற்றுக்கொண்டார். இதையடுத்து திமுகவினரும் அங்கிருந்து சென்றனர்.
கரூர் தொகுதி திமுக வேட்பாளரும், திமுக மாவட்டப் பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி வாக்கு எண்ணும் மையத்தில் இன்று (ஏப்.19ம் தேதி) ஆய்வு நடத்தினார். கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் ஆர்.இளங்கோ உடனிருந்தனர்.
ஆய்வுக்குப் பின் வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, ''2 நாட்கள் விடுமுறை என்ற நிலையில் கல்லூரி வளாகத்தில் பூட்டப்பட்ட அறையில் ஏசி, கணினி சர்வர்கள் இயக்கத்தில் இருந்துள்ளன. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தியாக இல்லை.
கரூர் தொகுதியில் 355 வாக்குச் சாவடிகள் உள்ளன. 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிய 45 நிமிடங்களாகும். இதனால் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலை ஏற்படும். 28 மேசைகளைப் போட்டு வாக்கு எண்ணிக்கையை விரைவாக நடத்தவேண்டும். இதுகுறித்து ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தெரிவித்துப் பரிசீலனை செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இரு அறைகளில் தலா 7 மேசைகள் போட்டுள்ளனர். இதனைத் தலா 10 மேசைகளாக அதிகரிக்கலாம்.
வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறைகள் உள்ள வளாகத்தில் மடிக்கணினி, வைஃபை, கணினி உபகரணங்கள் எடுத்து வர, பயன்படுத்தத் தேர்தல் ஆணையம் தடை விதிக்கவேண்டும். பாதுகாப்பு அறைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதில் மாவட்ட நிர்வாகம், தேர்தல் ஆணையம் முழு கவனம் செலுத்தவேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT