Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM
கட்டிடங்களுக்கு புதிய மின் இணைப்பு பெற்ற பிறகு, விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டால் எந்த புகாரும் அளிக்க மாட்டேன் என்ற உறுதிமொழி படிவத்தைப் பெற்று புதிய இணைப்புகளை வழங்குமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள மின்வாரியதலைமை அலுவலகத்தில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய தலைமைப் பொறியாளர்களுக்கு கடந்த 16-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், மின்இணைப்பு கோருபவர்கள் சிறப்பு திட்டத்தின்கீழ் மின்இணைப்பு பெறுவதற்கு சிலநிபந்தனைகள் விதிக்கப்ட்டுள்ளன. இந்த நிபந்தனைகள் அடங்கிய உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே மின் இணைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகளில், "கட்டிடத்தின் உயரம் 12 மீட்டருக்குள் இருக்க வேண்டும். அலுவலர்கள் கட்டிடத்தை ஆய்வு செய்யும்போது கட்டிடத்தின் உயரம் 12 மீட்டருக்கு மேல் இருந்தால் மின் இணைப்பு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ துண்டிப்பு செய்யப்படும். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.
இணைப்பு துண்டிக்கப்பட்டால் அது அடிப்படை உரிமை, மனித உரிமை மீறல் என்பது போன்ற உரிமைகளைக் கூறி இணைப்பு கோருபவரோ, அவரின் உறவினர்களோ, வாடகைதாரரோ எந்த புகாரும் அளிக்கக்கூடாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் செயலர் நா.லோகுகூறும்போது, "தமிழ்நாடு மின்வாரியம் மின் இணைப்பு வழங்குவதற்கு விதித்துள்ள நிபந்தனைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்குஎதிரானது. மேலும் மின்வாரியத்தின் மீது எந்த புகாரும் தெரிவிக்க கூடாது என கட்டாயப்படுத்தி உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து பெறுவது தனி மனிதனின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளது.
மின்வாரியம் அதிகார போக்குடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின் இணைப்பு கேட்பவர்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் விதத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பை மின்வாரியம் உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும்" என்றார்.
மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, “உத்தரவில் குறிப்பிட்டுள்ளதை பின்பற்றி மட்டுமே வரும் நாட்களில் அனைத்து மின் இணைப்புகளும் வழங்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT