Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM
திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டாரத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில வாரங்களாக முன்னெப்போதும் இல்லாத அளவில் தக்காளியின் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆட்கள்மூலமாக மேற்கொள்ளப்படும் அறுவடை செலவுக்குகூட கட்டுப்படியாகாத சூழல் நிலவுகிறது.
இதுகுறித்து மானுப்பட்டி பகுதியில் தக்காளி சாகுபடி செய்திருக்கும் செந்தில்குமார் கூறும்போது, "முன்பு வெங்காயம் சாகுபடி செய்தபோது மழையால் அழுகி வீணானது. அதனால் ரூ. ஒருலட்சம் இழப்பு ஏற்பட்டது. அரசிடம் இருந்து எந்தவித நிதி உதவியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, கட்டுப்படியான விலை கிடைக்கும் எனக் கருதி தக்காளி சாகுபடி செய்தோம். ஏக்கருக்கு 20,000 நாற்றுகள் என 2 ஏக்கரில் சாகுபடி செய்தோம். ஒரு நாற்றின் விலை ஒரு ரூபாய். நடவு, ஆட்கள் கூலி, உரம், பூச்சி மருந்து என ஏக்கருக்கு ரூ.50,000 வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. தண்ணீர், முறையான பராமரிப்புக்கு ஏற்ப அதிகபட்சம் ஏக்கருக்கு 12 டன் வரை விளைச்சல் கிடைக்கும். தினமும்40 பெட்டிகள் . (ஒரு பெட்டி என்பது 14 கிலோ எடை கொண்டது) வரை அறுவடை மேற்கொள்ளலாம்.
வெளி மாநிலங்களிலிருந்து வரத்து
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெட்டியின் விலை ரூ.350-க்கு விற்பனையானது.ஆனால், கடந்த 6 மாதங்களாக படிப்படியாக விலை குறைந்து, தற்போது ஒரு பெட்டியின் விலைரூ.25-ஆக உள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகமாகி உள்ளதே இதற்கு காரணம் என்கின்றனர். அதேசமயம், உடுமலை வட்டாரத்தில் ஒரே நேரத்தில் அதிக விவசாயிகள் ஒரே பயிரை சாகுபடி செய்வதும் விலை வீழ்ச்சிக்கு காரணமாகிறது. இதுதொடர்பான சந்தை வாய்ப்பு குறித்து ஆலோசனை வழங்க நிபுணர்கள் இல்லை. ஒரு பெட்டி அளவு அறுவடை செய்யவும், வாகன வாடகை, சுங்கம் ஆகியவற்றுக்காகவும் மட்டுமே ரூ.25 செலவு செய்ய நேரிடுகிறது.
உற்பத்திக்கேற்ப விலை இல்லை
குறைந்தபட்சமாக ஒரு பெட்டிக்கு ரூ.150 கிடைத்தால் மட்டுமே விவசாயிகள் ஓரளவு வருவாய் ஈட்ட முடியும். இதே நிலை நீடித்தால் வேளாண் தொழில் செய்வதையே நிறுத்திவிடும் மனநிலை ஏற்படுகிறது. படித்த இளைஞர்களிடையேயும், சமுகவலைதளங்களிலும் 2 ஏக்கர்இருந்தால்போதும் லட்சாதிபதியாகலாம் என்பது போன்ற மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது. நடைமுறையில் வேளாண்மை தொழில் அப்படி இல்லை.
எம்பிஏ பட்டதாரியாக இருந்தும், பாரம்பரிய வேளாண்மை தொழிலை மேற்கொண்டு வருகிறேன். உற்பத்திக்குஏற்ப விலை இல்லாத நிலையையே சந்தை வாய்ப்புகள் உருவாக்குகின்றன. அதிர்ஷ்டவசமாக சில நேரங்களில் உணவுப் பொருட்களுக்கு திடீர் பற்றாக்குறை ஏற்பட்டு, அதன்மூலமாக அந்த பொருளை வைத்திருக்கும் விவசாயிக்கு கூடுதல் விலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மற்ற சமயங்களில் வெளி மாநிலங்களில் இருந்துஅபரிமிதமான உற்பத்தி காரணமாக, அந்த பொருட்களுக்கு தமிழகம் பெரும் சந்தையாக மாறிவிடுகிறது. எங்களுக்கான இழப்பும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. இதற்கு அரசு தான் நிரந்தர தீர்வு காண முடியும்" என்றார்.
குளிர்பதன கிடங்கு வசதி
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி பாலதண்டபாணி கூறும்போது, "உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களிலுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1,000 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடும் வெயில்நிலவிய சூழலிலும், தண்ணீர் அதிகம் தேவைப்படும் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்து துயரத்தை சந்திந்து வருகின்றனர்.
அறுவடைக்குகூட கட்டுப்படியாகாத விலை வீழ்ச்சியால், மீண்டும்விவசாயிகளை கடனாளியாகமாற்றியுள்ளது. தக்காளியைமதிப்புக்கூட்டப்பட்ட பொருளாகமாற்றும் தொழிற்சாலைகளை உருவாக்குவதுடன், குளிர்பதனக்கிடங்கு வசதி ஏற்படுத்தவும் அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT