Published : 19 Apr 2021 03:17 AM
Last Updated : 19 Apr 2021 03:17 AM

தென்காசியில் வாக்கு எண்ணும் மையம் அருகே கன்டெய்னர்: திமுக நிர்வாகிகள் புகாரால் அகற்றம்

தென்காசியில் வாக்கு எண்ணும் மையம் அருகே வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர்.

தென்காசி

தென்காசியில் வாக்கு எண்ணும் மையம் அருகே வைக்கப்பட்டிருந்த கன்டென்யர் குறித்து புகார் வந்ததையடுத்து அது அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி), வாசுதேவ நல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் சட்டப்பேரவைத் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், தென்காசி அருகே கொடிக்குறிச்சியில் உள்ள யுஎஸ்பி பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டுள்ளன.

வரும் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது. மேலும், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இக்கல்லூரியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் நேற்று காலையில் பூட்டிய நிலையில் கன்டெய்னர் வைக்கப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்புப் பணியில் இருந்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் சந்தேகம் அடைந்தனர். இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தனர். மேலும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு தென்காசி டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் மற்றும் போலீஸார் சென்று பார்த்தனர். அந்த கன்டெய்னரில் பொருட்கள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அப்பகுதியில் திருநெல்வேலி, பெருமாள்புரத்தைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் கட்டிட வேலைக்காக வரும் பொறியாளர்கள் தங்குவதற்காக கன்டெய்னரை கொண்டுவந்து வைத்திருந்தது தெரியவந்தது. இருப்பினும் அந்த கன்டெய்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப் பட்டது. அப்பகுதியில் வேறு வாகனங்கள் நிறுத்துவதைத் தவிர்க்க போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன், தென்காசி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பழனி, சங்கரன்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ராஜா உள்ளிட்டோர் தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆகியோரை சந்தித்தனர்.

வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியே 24 மணி நேரமும் காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியேயும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x