Published : 18 Apr 2021 04:04 PM
Last Updated : 18 Apr 2021 04:04 PM
லத்தேரியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த லத்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (55). இவர், லத்தேரி பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 13 ஆண்டுகளாக பட்டாசுக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்று (ஏப். 18) காலை 9.30 மணிக்கு மோகன் தனது பட்டாசு கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்.
காலை 10 மணியளவில் அவரது மகள் வழி பேரன்கள் தேஜஸ் (8), தனுஜ்மோகன் (6) ஆகியோர், தாத்தாவை பார்க்க பட்டாசுக்கடைக்கு வந்தனர். அவர்களை கடையின் உள்ளே அமர வைத்து மோகன், தன் பேரன்களுடன் பேசிக்கொண்டிருந்தார். காலை 11 மணியளவில் பட்டாசு வாங்க வாடிக்கையாளர் ஒருவர் கடைக்கு வந்தார்.
பட்டாசுகளை வாங்கிய அந்த வாடிக்கையாளர் குறிப்பிட்ட ஒரு ரகத்தை எப்படி வெடிப்பது என மோகனிடம் செயல்முறை விளக்கம் கேட்டதாக கூறப்படுகிறது. அந்த பட்டாசை மோகன் கடைக்கு முன்பாக வைத்து அதை வெடிக்கச்செய்தார். அப்போது, அதிலிருந்து கிளம்பிய நெருப்பு பொறி கடைக்குள் விழுந்தது.
அடுத்த நொடி பட்டாசு கடையில் இருந்த பட்டாசு வெடித்து அங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. கடையின் உள்ளே இருந்த பேரன்களை காப்பாற்ற கடைக்குள் ஓடிய மோகனும் தீ விபத்தில் சிக்கினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தால் கடை முழுவதும் தீ பரவியது. இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அலறியடித்தபடி ஓடிவந்து தண்ணீரை கடை மீது ஊற்றினர்.
ஆனால், கடையில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் இருந்த பட்டாசுகள் ஒவ்வொன்றாக வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது. கடைக்குள்ளே சிக்கிய மோகன், தேஜஸ், தனுஜ்மோகன் ஆகியோர் அலறும் சத்தம் அங்கிருந்தோர்களை கதி கலங்கச்செய்தது.
உடனே, குடியாத்தம் மற்றும் காட்பாடி தீயணைப்புத்துறையிருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதற்குள்ளாக காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், லத்தேரி காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், தீ 'மளமள'-வென பரவியது.
இதையடுத்து, குடியாத்தம் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் 10 தீயணைப்பு வீரர்களும், காட்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் பால்பாண்டி தலைமையில் 12 தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.
சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீ விபத்தில் பட்டாசு கடையின் உரிமையாளர் மோகன் அவரது பேரன்களாக தேஜஸ் மற்றும் தனுஜ்மோகன் ஆகியோர், தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீயை கட்டுப்படுத்தியதும் உயிரிழந்தவர்களின் உடல்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இதையடுத்து, லத்தேரி காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக 3 பேரின் உடல்களையும் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், வேலூர் சரக டிஐஜி காாமினி, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் ஷேக்மன்சூர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார் (அணைக்கட்டு) லோகநாதன் (கே.வி.குப்பம்) மற்றும் வருவாய் துறையினர் அங்கு விரைந்து வந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தினர்.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறும்போது, "எதிர்பாராமல் நடந்த சம்பவம் இது. பட்டாசு கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில் குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசுக்கடைகளில் போதிய பாதுகாப்பு வசதிகள், தீ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய வருவாய் துறையினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் பட்டாசுக்கடைகளை இனி திறக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டி உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். இங்கு (லத்தேரி) ஏற்பட்ட தீ விபத்து குறித்து முழுமையான அறிக்கையை தயாரித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் சமர்ப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
லத்தேரி பட்டாசு கடையில் ஏற்பட்ட கோர தீ விபத்தால் சுற்றுவட்டாரத்தில் இருந்த 3 கடைகளில் தீ பரவி அங்குள்ள பொருட்களும் சேதமடைந்தன. அதேபோல, லத்தேரி பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகள் என சில பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. சேத மதிப்பு எவ்வளவு என்பது கணக்கிடப்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து, லத்தேரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேரில் சென்று அங்குள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT