Published : 18 Apr 2021 01:33 PM
Last Updated : 18 Apr 2021 01:33 PM
நடிகர் விவேக் உயிரிழப்பையும் அவர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதையும் தொடர்புப்படுத்தி வதந்தி பரப்புவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னையில் இன்று (ஏப். 18) அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"மறைந்த நடிகர் விவேக் நல்ல மனிதர். மாநகராட்சியின் பல திட்டங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் அவரை பயன்படுத்தியிருக்கிறோம். பாசிட்டிவான மனிதர். அவருடைய இறப்பு மிகவும் துரதிருஷ்டவசமான நிகழ்வு. அந்த காரணத்தால் நம்மிடையே இன்று அவர் இல்லை.
தடுப்பூசிக்கும் விவேக் மறைவுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. இத்தகைய மூட நம்பிக்கைகள் குறித்து, தன் வாழ்க்கை முழுதும் எதிர்த்து குரல் கொடுத்து வந்தவர் விவேக். அந்த ஆத்மாவுக்கு நாம் உண்மையாக மரியாதை செலுத்த வேண்டுமென்றால், இந்த அவதூறுகளையும் பொய் பிரச்சாரங்களையும் தூக்கிப்போட வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால், தடுப்பூசியை அதிகளவில் செலுத்த வேண்டும் என்பதுதான் அவர் நமக்கு கொடுத்த கடைசி செய்தி. அதனை செயல்படுத்தத்தான் நாம் வேலை செய்ய வேண்டும்.
இம்மாதிரி அவதூறு பரப்புபவர்கள் மீது பொது சுகாதார சட்டத்தின்கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். வேறு வலைதளங்களில் ஏதாவது பரப்பினால் சைபர் கிரைமில் வழக்கு பதியப்படும். இது விளையாட்டு கிடையாது. அதிமுக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம்.
தடுப்பூசி அறிவியல் ரீதியான தீர்வு. அமெரிக்காவில் கிட்டத்தட்ட 8 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்கின்றனர். 0.00001 என்ற அளவில்தான் அதில் பிரச்சினைகள் இருந்திருக்கின்றன. பல நாடுகளில் தடுப்பூசியே கிடைக்காமல் இருக்கின்றனர். 175 நாடுகளில் தடுப்பு மருந்து கிடைக்கவில்லை.
நம் நாட்டில் கோடிக்கணக்கில் தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்கிறோம். இதனை விளையாட்டாக எடுத்துக்கொண்டால் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த மாதிரியான நேரத்தில் வதந்திகளை பரப்புவது என்ன மாதிரியான மனித செயல் என தெரியவில்லை. மன்சூர் அலிகான் வதந்தி பரப்பியது தொடர்பான சம்பவத்தில் அவர் மீது வழக்கு பதியப்படும்".
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT