Published : 09 Dec 2015 11:22 AM
Last Updated : 09 Dec 2015 11:22 AM
‘லட்சத்தில் முதல் போட்டு கோடியில் வங்கியில் கடன் வாங்கி சூப்பர் பில்டர் கட்டிய வீடு, வெளியில் விலை உயர்ந்த கார்கள், பையில் கிரெடிட் கார்டுகள், நவீன அலைபேசிகள், தொலைக்காட்சி, குழந்தைகளுக்கு கான்வென்ட் படிப்பு, பாசுமதி யும் பிட்சாவும்தான் உணவு - இப்படியெல் லாம் ஆனந்தமாகச் சென்ற வாழ்க்கையை அசைத்துப் பார்த்துவிட்டது மழை!
வெள்ளம் சூழ்ந்தது. வீடும் விலை உயர்ந்த கார்களும் உதவவில்லை. கார்டுகளும் அலைபேசிகளும் காப்பாற்ற வரவில்லை. சொந்தங்களையும் அணுக முடியவில்லை - உதவியது கார்ப்பரேஷன் பள்ளிகள்; உயிர் கொடுத்தது நிவாரண உணவு. இதுதான் நிதர்சனம்; இதுதான் உண்மை. இயற்கையுடன் இணைந்து வாழாவிட்டால் இருப்பதும் இல்லாமல் போய்விடும் என்பதை இன்றைய தலைமுறைக்குச் சொல்லாமல் சொல்லி இருக்கிறது மழை.’ தனது ‘இசை மழலை’ இசைக் குழுவின் மூலம் இளம் பாடகர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் அபஸ்வரம் ராம்ஜி, மழையின் தாக்கத்தை தனது முகநூல் பக்கத்தில் இப்படி பதிவு செய்திருக்கிறார். அண்மையில் பெய்த அடைமழை தனக்கும் மனித குலத்துக்கும் நிறைய விஷயங்களை தனது பாணியில் ‘காட்டி’விட்டுப் போயிருக்கிறது என்று சொல்லும் ராம்ஜி, அதுகுறித்த தனது கருத்துகளை பகிர்ந்துகொள்கிறார்:
‘‘பொதுவாக சென்னையில் வசிப்பவர்கள் தங்களுக்குப் பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் என்பதைக்கூட தெரிந்துவைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் மழை, தரைத் தளத்தில் இருந்தவர்களுக்கு முதல் தளத்தில் இருந்தவர்களை அடைக்கலம் கொடுக்க வைத்திருக்கிறது. முகம் தெரியாத மனிதர்கள் எல்லாம் யார் யாருக்கோ உதவ ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
எனது இசைக் குழுவில் இருக்கும் பையன்கள் காலை 6 மணிக்கே எழுந்து ஓடுகிறார்கள்; அடுத்த தெருவில் இருதய நோயாலும் புற்றுநோயாலும் பாதிக்கப்பட்ட யாரோ இருவர், மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். அந்த வீட்டுக்கு எங்கள் வீட்டில் இருந்து மின்சாரம் போகிறது. எங்கள் வீட்டுக்கு வெளியிலும் எதிர்வீட்டில் இருக்கும் நடிகர் அரவிந்த்சாமி வீட்டு வெளியிலும் முழங்கால் அளவு தண்ணீர். அரவிந்த்சாமிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக தயவுகாட்டவில்லை மழை. நீ ஆடி கார் வைத்திருந்தாலும் நடந்துதான் போகணும் என்று பழசை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது மழை. அகதி போல் நிற்கும் மக்களுக்கு பள்ளிவாசல்களில் அடைக்கலம் அளித்துவிட்டு முஸ்லிம்கள் கோயில் வளாகத்தில் நமாஸ் செய்வதை நெகிழ்ச்சியோடு பார்க்கிறேன்.
உதவிக்கரம் நீட்ட மக்கள் இப்படிப் பொங்கி எழுந்து ஓடிவருவார்கள் என அரசியல்வாதிகள் எதிர்பார்க்கவில்லை. அரசியல், சாதி, மதம், இனம் அத்தனை பேதங்களையும் தகர்த்துப் போட்டிருக்கும் இந்த மழை எதிர்காலத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட தடம் தந்துவிட்டுப் போயிருக்கிறது. மனிதத்தைத் துளிர்க்க வைத்திருக்கும் மழை, சொகுசுக் கார்கள், இணையம், அலைபேசி வசதிகள், மின்சாரம் இவை எதுவுமே இல்லாமலும் மனிதன் உயிர்ப்புடன் இருக்க முடியும் என்பதை உணர்த்திவிட்டது.
வெளியில் கொட்டும் மழை. வீட்டுக்குள் மின்சாரம் இல்லை, தொலைபேசி தொடர்பு இல்லை, இணையத் தூது இல்லை, நடப்பைத் தெரிந்துகொள்ள தொலைக் காட்சி இல்லை. காய்ச்சிக் குடிக்க பால் இல்லை. கொஞ்சமாக இருந்த குடிதண்ணீர் மட்டுமே மிச்சம். ஆனால், இத்தனைக்கும் பதிலாக நாங்கள் இதுவரைப் பெறாத சிலவற்றைப் பெற்றோம்.
கடந்த ஒருவார காலமாக நான், என் மனைவி, மகன் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டோம். எங்களுக்குள் ஏகப்பட்ட கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து கொண்டோம். ஆத்மார்த்தமான குடும்பப் பிணைப்பை மீண்டும் எங்களுக்குப் புதுப்பித்துக் கொடுத்த மழை, குடும்பமாய் அமர்ந்து நிறையப் பேச வைத்தது. இத்தனை நாளும் இப்படி எல்லாம் பேசாமல் இருந்துவிட்டோமே என்ற ஏக்கத்தையும் எங்களுக்குள் விதைத்துச் சென்றிருக்கிறது மழை’’ நெகிழ்ச்சியுடன் முடித்தார் ராம்ஜி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT