Published : 18 Apr 2021 03:17 AM
Last Updated : 18 Apr 2021 03:17 AM
கரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் அனைத்து மாவட்ட சித்த மருத்துவப் பிரிவுகளுக்கும் தலா 300 கிலோ கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
சித்த மருத்துவத்தில் திப்பிலி, நிலவேம்பு, சீந்தில்பொடி, ஆடாதொடை, வட்டத் திருப்பி, முள்ளிவேர், சந்தனம் உள்ளிட்ட 15 வகையான அரிய மூலிகைகளைக் கொண்டு கபசுரக் குடிநீர் சூரணம் தயாரிக்கப்படுகிறது.
சளியினால் அதிக பாதிப்பு ஏற்படுத்தி உயிரிழப்பு வரை கொண்டு செல்லும் கரோனா தொற்றுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கடந்த ஆண்டு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டன.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவ முகாம்கள் மூலம் கபசுரக் குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
தற்போது, கரோனா 2-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதில், கடந்த ஆண்டு போல, தற்போதும் கபசுரக் குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதில், முதல்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 300 கிலோ கபசுரக் குடிநீர் சூரணம், நிலவேம்பு குடிநீர் சூரணம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் கூறும்போது, “கடந்தாண்டு கரோனா தொற்று ஏற்பட்டபோது கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இதற்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்ததால், கடந்த ஆண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 1,000 கிலோ வரை, கபசுரக் குடிநீர் சூரணம் பயன்படுத்தப்பட்டன” என்றனர்.
தமிழக அரசின் சித்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘டாம்ப்கால்’ நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை மூலம் கபசுரக் குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் சூரணங்களை, அந்தந்த மாவட்டங்களுக்கு தலா 300 கிலோ வீதம் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பயன்படுத்த தலா 50 கிராம் கபசுரக் குடிநீர் சூரணம் கொண்ட ஒரு லட்சம் பாக்கெட்டுகளுக்கு அரசு ஆர்டர் கொடுத்தது. இதில், முதல்கட்டமாக 25 ஆயிரம் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்த சில நாட்களில் மீதமுள்ளவை வழங்கப்படும். கபசுரக் குடிநீர் சூரணத்தின் தேவை அதிகரித்தால், அதற்கேற்ப உற்பத்தி அதிகரிக்கப்படும். கடந்த ஆண்டு தமிழக அரசுக்கு 4 டன் கபசுரக் குடிநீர் சூரணம் வழங்கப்பட்டது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT