Published : 29 Dec 2015 05:50 PM
Last Updated : 29 Dec 2015 05:50 PM
டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியது போன்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்த சிபிஐ முன்வருமா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான மக்களுக்கு முழுமையான அளவில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி தேமுதிக சார்பில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவக்கொழுந்து தலைமைவகித்தார். கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:
தமிழகத்தில் ஆட்சி செய்பவர்களுக்கு பணத்தாசையும், பதவி ஆசையும் தான் உள்ளது. மக்களைப் பற்றி கவலையில்லை.
கடலூர் மாவட்டத்தை சுனாமி தாக்கியது, தானே புயல் தாக்கியது, தற்போது கனமழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எப்போதாவது ஜெயலலிதா வந்தாரா?
வீராணம் ஏரியையும் பெருமாள் ஏரியையும் தூர் வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நிதி முறையாக செலவிடப்படவில்லை. முறையாக செயல்படுத்தியிருந்தால் இப்போது ஏற்பட்டிருக்கும் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
நான் எதையும் வெளிப்படையாக பேசக்கூடியவன், அதனால் என்னை உளறுகிறேன் எனக் கூறுகிறனர்.மற்றவர்கள் பேசுவதைப் பற்றி கவலைப்படக் கூடியவன் நானல்ல.
தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குப் பிறகு மத்திய அரசு ஒதுக்கிய நிதி என்னவாயிற்று? கடலூர் ஆட்சியரோ சாப்பாடு போட்டதற்கே ரூ.40 கோடி செலவாகிவிட்டது என கணக்கு காண்பிக்கிறார். இவர் ஜெயலலிதாவை விஞ்சிவிட்டாரா எனத் தெரியவில்லை.
அதேபோன்று காவல்துறைக்கான அலைக்கற்றைக் கட்டணம் ரூ.140 கோடியை ரத்து செய்யவேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் கடந்த ஆண்டு காவல் துறையின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3 ஆயிரம் கோடியை மத்திய அரசிடமே திருப்பி அனுப்பியது ஏன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார். அதற்கு ஜெயலலிதாவிடம் இருந்து பதிலேயே காணோமே?
ஒவ்வொரு அமைச்சர் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தவேண்டும். டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்தியதே! அதேபோன்று ஜெயலலிதா முதல் அதிமுக அமைச்சர்கள், கவுன்சிலர்கள் வீடு வரை அனைவரிடத்திலும் சிபிஐ சோதனை நடத்த முன்வருமா? அடுத்து தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் பிரச்சினை தான்.
ஏனெனில் தற்போது தமிழக அரசின் கடன் 4.5 லட்சம் கோடி. இதற்கு மாதாமாதம் ரூ.17 ஆயிரம் கோடி வட்டியாக செலுத்துப்படுகிறது. எனவே கடும் நிதி நெருக்கடியில் தமிழக அரசு சிக்கியுள்ளது'' என்று விஜயகாந்த் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT