Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM
தமிழகத்தில் கரோனா வைரஸின் 2-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் பொதுமக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த 6-ம் தேதி வரை பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பொதுமுடக்கம் குறித்து வரும் தகவல்கள் ஊர்ஜிதமற்றது என்று தெரிவித்த தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்’ என அறிவுறுத்தி வருகிறார்.
நம் கடலூர் மாவட்டத்தைப் பொறுத்த வரையில் கரோனாவின் மொத்த பாதிப்பு இதுவரையில் 27 ஆயிரத்தை கடந்து விட்டது. இதில், கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே கரோனவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு தற்போது 750 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 350 பேர் வெளியூர்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் 11, 369 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 10,929 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். சுமார் 500 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 16,229 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு 15,700 பேர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 495 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தற்போது அனைவருக்கும் அலோபதி எனும் ஆங்கில மருத்துவ முறையில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியிலும், குமாரபுரம் கிருஷ்ணசாமி கல்லூரியிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இங்கு சுமார் 2,500 பேர் வரையில் சிகிச்சை பெற்று முழுவதுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த முறை இம்மருததுவ முகாம்களில் சித்த வைத்திய முறையில் சிகிச்சை பெற்றவர்களில் ஒரு உயிரிழப்புக் கூட நிகழவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், முதலில் சித்த வைத்தியத்தில் சிகிச்சை பெற தயங்கியவர்கள் பின்னர் அந்த வைத்தியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியதும் நாம் காண முடிந்தது.
பின்னர், தோய் தொற்றின் தாக்கம் குறைய, நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. சித்த வைத்திய முகாம் கலைக்கப்பட்டு, அலோபதி மருத்துவம் மட்டுமே அளிக்கப்பட்டது.
தற்போது கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இம்முறை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மக்களிடம் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வரும் நிலையில், பலர் அச்சம் காரணமாக தடுப்பூசி போட தயங்குகின்றனர்.
அதேநேரத்தில் கரோனா முதல் அலையில் அளிக்கப்பட்ட சித்த மருத்துவம் குறித்து அரசு எந்த அறிவிப்பையும் இம்முறை அரசு வெளியிடவில்லை.
இதுகுறித்து அரசின் சுகாதார துறையினர் மற்றும் மத்திய அரசு ஆயுஷ் அமைச்சக அதிகாரிகளிடையே பேசிய போது, “கடலூர் மாவட்டத்தில் 45 இடங்களில் அரசு சித்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தலா 25 மருந்தாளுநர்கள், மருத்துவப் பணியாளர்கள் இடம் காலியாக உள்ளது. இப்பணியிடங்களை நிரப்பி விட்டு கரோனா சிகிச்சை முகாம் அமைத்தால் மட்டுமே முழுமையாக இயங்க முடியும். ஒரு முகாமிற்கு குறைந்தபட்சம் தலா 3 மருத்துவர், மருந்தாளுனர், மருத்துவ பணியாளர்கள் தேவைப்படுவார்கள். எனவே, தற்காலிகமாவது இப்பணியிடங்களை நிரப்பிய பின்னரே சிகிச்சைக்கான முகாம் அமைக்கப்பட வேண்டும்.
சித்த வைத்திய முறையிலான சிகிச்சை மையங்களில் அவர்களுக்கான உணவு, கஷாயம் போன்றவற்றையும் நாங்களே தயாரிக்கும் அளவிற்கு கூடுதல் பணியாளர்கள் வழங்கினால் முழு திறனுடன் செயல்பட முடியும். தற்போதும், ஆங்கில முறையில் சிகிச்சை பெறுவோருக்கும் கபசுர கஷாயம், அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், ஆடாதொடா சூரணம் ஆகியவற்றை சித்த வைத்திய முறையில் வழங்கி வருகிறோம் என்று தெரிவித்தனர்.
மக்களின் மனநிலை அறிந்து மீண்டும் சித்த வைத்தியம் முறையிலான வைத்தியத்தை தொடங்குவது காலத்தின் கட்டாயம். இதை உணர்ந்து செயல்பட்டால் 2-வது அலையை வெல்லலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT