Published : 17 Apr 2021 07:18 PM
Last Updated : 17 Apr 2021 07:18 PM

கரோனா உடற்பரிசோதனை ஆய்வு மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கான முதற்கட்ட உடற்பரிசோதனை மையத்தை ஆணையர் பிரகாஷ் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், இரண்டு மீட்டர் இடைவெளியுடன் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அவ்வப்பொழுது கைகளை சோப்பு கரைசல் மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்திக் கொள்ளுதல், கடைகள் மற்றும் வணிக வளாகங்களின் வாயிலில் கிருமி நாசினி திரவங்கள் வைத்தல் போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப, தொற்று பாதித்த நபர்களை அவர்களின் வீடுகள், கோவிட் பாதுகாப்பு மையங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா பாதித்த நபர்களுக்கு முதல்நிலை உடற்பரிசோதனை செய்வதற்காக 12 முதல்நிலை உடற்பரிசோதனை மையங்கள் (Screening Centres) உள்ளன. இந்த முதற்கட்ட உடற்பரிசோதனை மையத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கு இரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, சுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் இரத்தக் கொதிப்பு போன்ற பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வளசரவாக்கம் மண்டலம், வார்டு-154க்குட்பட்ட இராமாபுரம் ஹூசைனி உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் தொற்று பாதித்த நபர்களுக்கான முதற்கட்ட உடற்பரிசோதனை மையத்தை (Screening Centres) ஆணையாளர் பிரகாஷ், இன்று (17.04.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து ஆணையர், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-151க்குட்பட்ட போரூரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 16 நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகள் மற்றும் 24 மணிநேரமும் இயங்கும் 3 மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன.

இந்த நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் Ultra Sonogram, கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பகப் புற்றுநோய் கண்டறிதல், பொது அறுவை சிகிச்சைகள், சாதாரண மகப்பேறு மற்றும் மகப்பேறு அறுவை சிகிச்சைகள் போன்ற பல்வேறு சிகிச்சைகளும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆலோசனைகள் வழங்க ஆலோசனை மையங்களும் உள்ளன. பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெற்று பயனடையுமாறு ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது இணை ஆணையாளர் (சுகாதாரம்) (பொ) ஆல்பி ஜான் வர்கீஷ், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மண்டல அலுவலர் ராஜசேகர், மண்டல நல அலுவலர் டாக்டர் ராஜா, மருத்துவ அலுவலர் டாக்டர் ராணி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x