Published : 17 Apr 2021 04:17 PM
Last Updated : 17 Apr 2021 04:17 PM

நடிகர் விவேக் நினைவாக உதகையில் மரம் நட்ட பழங்குடியினர்

நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர் பழங்குடியினர், அவரது நினைவாக மரக்கன்றுகளை நட்டு அஞ்சலி செலுத்தினர்.

நடிகரும், சமூக ஆர்வலருமான சின்னக் கலைவாணர் என அன்போடு அழைக்கப்படும் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இவரது மறைவுக்கு திரைத் துறையினர் மட்டுமல்லாமல் தமிழகமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்துக்கும் அவரது தொடர்பு இருந்து வந்தது. சுற்றுச்சூழலில் நீலகிரி மாவட்டத்தின் பங்கை அறிந்திருந்த நடிகர் விவேக், நீலகிரியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

நீலகிரி மாவட்டத்துக்கு முதன்முறையாக கடந்த 2018-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு உதகையில் பள்ளி மாணவர்களுடன் மரங்களை நட்டார். வெற்றிடம் இருந்தால் நான் மரம் நடுவேன் என மாணவர்களிடம் கூறி, மரங்களை வளர்க்க ஊக்கப்படுத்தினார்.

மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறத்தினார். பின்னர் 2019-ம் ஆண்டு உதகை அருகேயுள்ள எல்லநள்ளி பகுதியில் தூய்மை பணியை மேற்கொண்டார்.

அப்போது அவர் ‘உதகை உலகின் முக்கிய சுற்றுலா தலம். 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த மாதிரி உதகை இல்லை. சுத்தமாக உள்ளது.

உதகையில் மரங்கள் உள்ள நிலையிலும், மழை இல்லை. நீலகிரி மாவட்டத்தின் தட்பவெட்பம் 1.6 டிகிரி அதிகரித்துள்ளது. உதகையில் உள்ள ஹோட்டல்களில் விசிறிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இங்குள்ளது கற்பூர மரங்கள். இவற்றைத் தவிர்த்து நாம் நாட்டு மரங்களை நட வேண்டும். நாம் என்ன மரம் நட வேண்டும் என்பதில் கவனம் வேண்டும். விக்கி, குறுநாவல், கலாக்கா, காட்டு ஆரஞ்சு, மா, மரங்கள் அதிகமாக இருந்தாலே மழை வந்து விடும். வரும் தண்ணீரை சிக்கனமாக சேமித்து பயன்படுத்த வேண்டும்’ என்றார்.

இந்நிலையில், அவர் உயிரிழந்தது மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மறைந்த நடிகர் விவேக்கை நினைவுகூரும் வகையில், நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள பகல்கோடு மந்தை சேர்ந்த தோடர் பழங்குடியினர் மரக்கன்றை நட்டு அஞ்சலி செலுத்தினர்.

‘நீலகிரி மாவட்டத்தில் மக்களையும், பழங்குடியினரையும் இணைத்து நடிகர் விவேக்கின் லட்சியமான 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு இயற்கையை பாதுகாப்போம்" என தோடர் பழங்குடியினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x