Last Updated : 17 Apr, 2021 02:52 PM

1  

Published : 17 Apr 2021 02:52 PM
Last Updated : 17 Apr 2021 02:52 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய முறையில் மரம் வளர்க்கப்பட்டதை பாராட்டியவர் நடிகர் விவேக்

பணியாளர்களை பாராட்டிய விவேக்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய முறையில் மரம் வளர்க்கப்பட்டதை பாராட்டியவர் நடிகர் விவேக் .

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகளை நடவும், அவற்றை பராமரிக்கவும் அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் இந்த திட்டப் பணியாளர்கள் மூலம் நீர்நிலைகளின் கரையோரங்கள், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

அதேசமயம், புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் நடப்படும் மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்திவிடுவதால் அதிக எண்ணிக்கையில் போத்துகள் (மரக் கிளைகள்) நடப்பட்டன.

அதாவது, ஆல், அரசு, பூவரசு போன்ற மரங்களில் இருந்து வெட்டி ஊன்றப்படும் போத்துகளும் நன்கு வளரக்கூடியது என்பதால், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளின் கரையோரம், சாலையோரங்களில் லட்சக்கணக்கில் ஊன்றப்பட்டன.

சுமார் 5 அடி வீதம் உயரமுள்ள மரக்கிளைகளைச் சுற்றிலும் முள் வேலி அமைக்கப்பட்டும், தண்ணீர் ஊற்றியும் பராமரிக்கப்பட்டு வந்தன. இவற்றை கால்நடைகள் சேதப்படுத்தாததாலும், வறட்சியைத் தாங்கியும் வளரக்கூடிய தன்மை உள்ளதாலும் மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் இன்று விருட்சமாக உள்ளன.

சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியராக பணிபுரிந்த சு.கணேஷ் (தற்போதைய இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இயக்குநர்) உத்தரவின் கீழ்தான் போத்து முறையில் மரம் வளர்ப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு, ஆட்சியர் புதிய முறையில் மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வருவதை அறிந்த நடிகர் விவேக், கடந்த 2018 மார்ச் 18-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவேங்கைவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் போத்துகள் மூலம் மரம் வளர்ப்பு பணியை பார்வையிட்டார்.

புதிய திட்டத்தை கடைபிடித்து, வறட்சியான பகுதியையும் பசுஞ்சோலையாக மாற்றும் முயற்சியை மேற்கொண்ட ஆட்சியர் கணேஷையும் வெகுவாக பாராட்டினார்.

அப்போது, "இத்தகைய அயராத பணியை செய்து வரும் நீங்கள் (ஆட்சியர்) இந்த மாவட்டத்தை விட்டு சென்றாலும் இந்த லட்சம் மரங்களும் உங்கள் பெயரை தினமும் உச்சரிக்கும்" என்று குறிப்பிட்டார்.

அதோடு, மரக்கன்றுகளை பராமரித்து வரும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களையும் பாராட்டியதோடு, இவையெல்லாம் உங்களது எதிர்கால சந்ததியினரின் சொத்து என்பதால் நன்கு பாதுகாக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மரக்கன்றுகள் வளர்ப்பில் புதிய முறையைக் கையாண்டு வரும் ஆட்சியரை பாராட்டிதை மாவட்டத்தின் அலுவலர்கள், பொதுமக்கள் நினைவுகூர்ந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில் உள்ள பெரிய குளத்தின் கரையோரங்களில் இளைஞர்கள் சார்பில் நடிகர் விவேக் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x