Published : 17 Apr 2021 12:42 PM
Last Updated : 17 Apr 2021 12:42 PM
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பாக நடைபெறவுள்ள தேர்வினை கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஸ்டாலின் இன்று (ஏப். 17) வெளியிட்ட அறிக்கை:
"தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) சார்பாக, இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என, மொத்தம் 10 ஆயிரத்து 906 காலிப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 21-04-2021 முதல் ஒரு வார காலத்திற்கு தமிழகம் முழுவதும், நடத்தப்பட உள்ளதாகத் தெரிகிறது.
கரோனா இரண்டாம் அலை மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், இத்தேர்வினை நடத்துவது என்பது கரோனா பரவல் மேலும் அதிகரிக்கவே அதிக வாய்ப்பினை உருவாக்கும்.
திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், இத்தேர்வினை ஒத்திவைப்பதே சரியான முடிவாக இருக்கும்.
எனவே, இந்த உடற்தகுதி தேர்வினை, இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை குறையும் வரை ஒத்திவைக்க வேண்டும் எனத் தமிழக அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT