Published : 17 Apr 2021 12:32 PM
Last Updated : 17 Apr 2021 12:32 PM
விவேக் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பேரிழப்பு என, தேமுதிக பொருளாளர் பிரேமலதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக். நேற்று (ஏப்ரல் 16) காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
விவேக்கின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவருக்கு எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
விவேக்கின் உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் நேரில் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, "விவேக்கின் அகால மரணம் திரையுலகுக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, தமிழ் உலகத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த தமிழர்களுக்குமே இதனை இழப்பாக நாங்கள் கருதுகிறோம்.
'சின்னக் கலைவாணர்' என திரையுலகத்தாலும் மக்களாலும் போற்றப்பட்டவர். திரையுலகத்தில் மட்டும் அவர் பங்கு இல்லை. சமூகத்தின் மீது மிகப்பெரிய அக்கறை கொண்டு, மரம் வளர்த்தல், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று நல்ல சமூக சேவைகளை செய்தவர்.
அதுமட்டுமல்ல, எல்லோரையும் அவர் சிரிக்க வைத்தவர். அவருடைய மகன் இறப்புக்குப் பின்னர் அவர் மன அழுத்தத்தில் இருந்ததை நாங்கள் பலதடவை பார்த்திருக்கிறோம். விஜயகாந்த் மீது அவருக்கு மிகப்பெரிய பற்று உண்டு. அவருக்கும் விவேக் மீது பற்றும் அன்பும் கொண்டவர். இந்த செய்தி கேட்டவுடனேயே உடனடியாக நாங்கள் சென்று இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வேண்டும் என, விஜயகாந்த் கூறினார்.
தேமுதிக, எங்கள் குடும்பம், ஒட்டுமொத்த திரையுலகம் சார்பாக, அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியிருக்கிறோம். ஆறுதல் என்பது வெறும் வார்த்தைகள்தான். அவருடைய மனைவி, இரு மகள்களுடன் பேசும்போது மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டும்" என பிரேமலதா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT