Published : 17 Apr 2021 11:16 AM
Last Updated : 17 Apr 2021 11:16 AM
மனிதநேயரை, தூய சிந்தனை கொண்ட ஒரு மனிதரை இழந்திருக்கிறோம் என, நடிகர் விவேக் மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஏப். 17) வெளியிட்ட இரங்கல் செய்தி:
"நகைச்சுவை நடிகர் விவேக் திடீரென உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.
60 ஆண்டுகள் கூட நிரம்பாத அவர், உடல் நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து திரும்பி வந்து கலைத்துறைக்கு பணியாற்றுவார் என்று ஆவலோடு எதிர்பார்த்தோம். ஆனால், நம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தி நம்மை விட்டு பிரிந்து விட்டார்.
நகைச்சுவை வேடங்களில் நடித்து சரித்திரம் படைத்த கலைவாணரைப் போல, திரைப்படங்களில் சமுதாய, சீர்திருத்த, பகுத்தறிவு, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நடிகர் விவேக். அதனால், அவர் 'சின்னக் கலைவாணர்' என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.
நகைச்சுவை நடிகரான இவர், கதாநாயகனின் நண்பராகவும், பல குணசித்திர கதாபாத்திரங்களிலும், பிறகு கதாநாயகனாகவும் நடித்து சாதனை படைத்தவர்.
திரைப்படக் கலைஞர் என்ற நிலையிலிருந்து, சுற்றுச்சூழல் ஆர்வலராகவும், முற்போக்கு சிந்தனையோடு அறிவார்ந்த கருத்துகளை மக்களிடையே பரப்பியவர். நடிகர் விவேக்-ஐ மட்டும் நாம் இழக்கவில்லை. அற்புதமான பண்பாளரை, மனிதநேயரை, தூய சிந்தனை கொண்ட ஒரு மனிதரை இழந்திருக்கிறோம். இவரின் இழப்பு கலைத்துறைக்கும், தமிழ்ச் சமுதாயத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
நடிகர் விவேக்-ஐ இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைப்படத்துறையினருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT