Published : 29 Dec 2015 08:35 AM
Last Updated : 29 Dec 2015 08:35 AM
*
சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தைத் தொடர்ந்து, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளில் எவ்வித கட்டுமானப் பணிகளும் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இம்மாதம் 16-ம் தேதி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கெனவே, உச்ச நீதிமன்ற மும், சென்னை உயர் நீதிமன்றமும் இது போன்ற ஏராளமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன என்பதை சற்று பின் னோக்கிப் பார்த்தால் அறிந்து கொள்ள முடியும்.
தனி மனிதன் மட்டுமின்றி, பொது பயன்பாட்டுக்காக கட்டப்படும் அரசு கட்டிடங்கள் கூட நீர்நிலைகளை தூர்த்து கட்டப்படக் கூடாது என்று 1997-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்த ரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே ஓடைப் புறம்போக்கு நிலம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆக் கிரமிப்புகளை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், 2005-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப் பளித்தது. நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜூ, இப்ராஹிம் கலிஃபுல்லா ஆகி யோரைக் கொண்ட இந்த அமர்வு பிறப் பித்த அந்த தீர்ப்பில், தமிழ்நாடு முழுவதும் ஆக்கிரமிப்புகளில் உள்ள நீர்நிலைகள் கண்டறியப்பட வேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றி, முந்தைய அசலான நிலைக்கு அனைத்து நீர்நிலைகளையும் அரசு கொண்டு வர வேண்டும் என்ற மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இதன் தொடர்ச்சியாகவே, தமிழ்நாடு நீர்நிலைகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கி ரமிப்புகள் அகற்றும் சட்டம் 2007-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. நீர் நிலைகளில் மேற்கொள்ளப்படும் ஆக்கி ரமிப்புகளை உடனடியாக அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்களை தண்டிக்கவும் பல விதிகள் இந்த சட்டத்தில் உள்ளன.
எனினும் அதன் பிறகும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடரவே செய் கின்றன. இந்த சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று கோரி பலர் நீதிமன்றத்தை நாடினர்.
அத்தகைய வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கள் பிரபா தேவன், எம்.சத்திய நாராயணன் ஆகியோர், “தற்போதைய தலைமுறைக்கு மட்டுமின்றி, எதிர்கால தலைமுறைகளின் நலன்களுக்காகவும் நீர்நிலைகளை பாதுகாப்பது என்பது மிக மிக அவசியம். ஆகவே, நீர்நிலை களைப் பாதுகாக்க அரசு அதிக முக்கியத் துவம் தர வேண்டும்” என 2010-ம் ஆண்டு உத்தரவிட்டனர். “இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை புறந்தள்ளும் நடவடிக்கை கள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்புகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என அப்போது நீதிபதிகள் எச்சரித்தனர்.
இந்த வழக்குகள் யாவும் ஒருசில உதாரணங்கள் மட்டுமே. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும், இன்னொரு புறம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைகளுக்கு தடை கோரியும் பல வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வந்தன. ஆக்கிர மிப்புகளை அகற்றி, நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என தொடர்ச்சி யாக பல உத்தரவுகளை நீதிமன்றங்கள் பிறப்பித்துக் கொண்டேயிருக்கின்றன. எனினும் இந்த உத்தரவுகளை அமல் படுத்துவதில் அரசு அதிகாரிகள் காட்டும் தயக்கம் மற்றும் அலட்சியம் காரணமாக, ஆக்கிர மிப்புகள் மேலும் அதிகரித்தபடியே உள்ளன.
இந்தச் சூழலில் நீர்நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பான ஒரு வழக் கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை வரலாற்றுச் சிறப்பு மிக்க உத்தரவுகளைப் பிறப்பித்தது.
1923-ம் ஆண்டு சர்வே அடிப் படையில் ஆக்கிரமிப்புகள் அனைத்தை யும் அகற்றி எல்லா நீர்நிலைகளையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கு மாறு அரசுக்கு உத்தரவிட கோரி வழக் கறிஞர் ஆர்.லட்சுமணன் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
ஏரியை தூர்த்து நீதிமன்ற கட்டிடம்
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் தங்கள் உத்தர வில் கூறியிருந்ததாவது:
நீர்நிலைகளை தனியார் ஆக்கிர மிப்பது என்பது தவிர, நீர்நிலைகளில் ஏராளமான அரசுக் கட்டிடங்கள் கட்டு வதற்கு பொதுப்பணித் துறையினரே அனுமதி தருகின்றனர் என மனுதாரர் கூறியுள்ளார். மதுரையில் உலகனேரி என்ற மிகப்பெரிய ஏரி ஒன்று இருந்தது. அந்த ஏரி தூர்க்கப்பட்டு, அந்த இடத்தில்தான் தற்போது உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வுக்கான கட்டிடமே கட்டப்பட்டுள்ளது. ஆகவே, நீர்நிலைகளின் மேல் அரசாங்கமே கட்டிடங்கள் கட்டும் இத்தகையப் போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று மனுதாரரின் வாதம் மிகவும் சரியானதே.
தமிழ்நாடு முழுவதும் 39 ஆயிரத்து 202 ஏரிகள் உள்ளன என்றும், அவற் றில் 13 ஆயிரத்து 699 ஏரிகள் தங்கள் பராமரிப்பில் உள்ளன என்றும் பொதுப் பணித் துறையினர் கூறியுள்ளனர். எனினும் அவற்றில் 3 ஆயிரத்து 701 ஏரிகள் மட்டுமே முழுமையாக பாது காக்கப்பட்டுள்ளன என பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. வேறு வார்த் தைகளில் கூறுவது என்றால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் முழுமையாக பாதுகாக்கப்படவில்லை என்றும், ஏரியின் எல்லைகளை சர்வே செய்வது, எல்லைக் கற்கள் நடுவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வேகமாக பாயும் பணம்
நவீன பாசன வேளாண்மை மற்றும் நீர்நிலை மறுசீரமைப்பு மற்றும் நிர்வாக திட்டம், அணைகள் மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம், பாரம் பரிய நீர்நிலைகள் மறுசீரமைப்புத் திட்டம், புதிய அணைகள், ஏரி களை உருவாக்குவதற்கான நபார்டு நிதி உதவித் திட்டம் என நீர்நிலை களைப் பாதுகாப்பதற்கான ஏராள மான திட்டங்கள் இங்கு செயல்படுத்தப் படுகின்றன. இந்தத் திட்டங்களுக்காக கோடிக்கணக்கான ரூபாய் பணம் செலவிடப்படுகிறது. இந்தப் பணம் வெள்ளத்தை விடவும் வேகமாக பாய்வது போல் உள்ளது. இந்த தொகை முழுவதும் உண்மையிலேயே இந்தத் திட்டங்களுக்காக முழுமையாக செலவு செய்யப்பட்டிருந்தால், தமிழ் நாடு முழுவதும் நாம் பசுமைப் புரட்சியை பார்த்திருக்கலாம். ஆனால் எப்படி கசிவு ஏற்பட்டு, எங்கெல்லாம் பணம் செல்கிறது என்பது நமக்கு தெரியவில்லை.
ஓராண்டுக்குள் நடவடிக்கை
இந்த சூழலில் கீழ்கண்ட உத்தரவு களை இந்த நீதிமன்றம் பிறப்பிக்கிறது: நீர்நிலைகளின் மீதான கட்டுமானப் பணிகளுக்கு எவ்வித அனுமதியும் தரக் கூடாது என அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்துகளுக்கு அரசு உத்தரவிட வேண்டும். கட்டிடம் கட்ட அல்லது மனை அங்கீ காரம் கோரி சமர்ப்பிக்கப்படும் விண் ணப்பங்களுடன், அந்த இடம் நீர் நிலையில் இல்லை என வருவாய்த் துறை அளிக்கும் சான்றையும் இணைத்து தருமாறு அரசு உத்தரவிட வேண்டும். அந்த சான்றின் உண்மைத்தன்மைக்கு அதனை வழங்கும் அதிகாரியையே பொறுப்பாளராக ஆக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளிலிருந்து நீர்நிலைகளை மீட்டு பாதுகாப்பதற்கான பொதுப்பணித் துறையின் நட வடிக்கைகள் ஓராண்டுக்குள் முடிக்கப் பட வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக பொதுப்பணித் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் வகையில் சிவில் நீதி மன்றங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.
இந்த உத்தரவுகள் கடந்த ஓராண்டு காலத்துக்குள் முழுமையாக அமல்படுத்தப்பட்டிருக்குமானால், தமிழ்நாட்டில் உள்ள பல நீர்நிலை ஆக்கிரமிப்புகள் இந்நேரம் அகற்றப் பட்டிருக்கும். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் காரணமாக சென்னை மாநகரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் கூட கணிச மாகக் குறைந்திருக்கும். எனினும் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற் றப்படவில்லை.
இது குறித்து சென்னை வளர்ச்சி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் கூறிய தாவது: நீர்நிலைகளில் கட்டப் பட்டுள்ள ஆக்கிரமிப்பு கட்டுமானங் களை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசே மேற்கொள் கிறது. மறுபுறம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகளையும் முழுமையாக நிறை வேற்ற அதிகாரிகள் தயங்குகின்றனர். இதற்கெல்லாம் வாக்கு வங்கி அரசி யல்தான் காரணம். தற்போதைய மழை வெள்ள பாதிப்புகளை இயற்கை பேரிடர் என கூற முடியாது. இவையாவும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.
நடந்தவையெல்லாம் நடந்த வையாகவே இருக்கட்டும். இனியாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1900-ம் ஆண்டு களின் ஆங்கிலேயே ஆட்சிக்கால சர்வே மற்றும் செட்டில்மெண்ட் பதிவேடு களின்படி அனைத்து நீர்நிலைகளையும் ஆக்கிரமிப்பு களிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களையும் ஒருங்கிணைந்த நீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதன் மூலம் இந்த மாவட்டங்களில் உள்ள சுமார் 3,600 ஏரிகளை பழைய நிலைக்கே கொண்டு வர வேண்டும்.
தற்போது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.26 ஆயிரம் கோடி தேவை என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியுள்ளது. இவ்வளவு பெரிய நிதியில் ஒரு பகுதியைக் கொண்டே சென்னைக்கான நீர்வழித் தடங்களையும், பிற நீர்நிலைகளையும் மீட்டெடுத்து பாதுகாக்க முடியும். அப்படிச் செய்தால் இரட்டைப் பலன்கள் கிடைக்கும். அதாவது, எவ்வளவு மழை பெய்தாலும் ஏரிகளில் தண்ணீரை தேக்கி, வெள்ளச் சேதங்களை தடுக்க முடியும். இந்த 3 மாவட்டங்களுக்கான குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் நிரந்த தீர்வு கிடைக்கும் என்று அவர் கூறினார்.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளால் வேளாண்மைத் துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிகள், குளங் கள், கண்மாய்கள் மூலம் மட்டுமே 1960-ம் ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டில் சுமார் 23 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அதுவே 2011-ம் ஆண்டு வாக்கில் சுமார் 13 லட்சம் ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால் எதிர்கால உணவுப் பாதுகாப்பு என்பது மிகவும் கேள்விக் குரியதாகி விடும்.
நடவடிக்கை என்ன?
இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கே.கே.ரமேஷ் என் பவர் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஒரு பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.ராம சுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர், ஆக்கிரமிப்பில் உள்ள நீர்நிலைகளை மீட்டு, பாதுகாக்க வேண்டும் என்று இந்த நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளின் மீது என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றி அரசுத் தரப்பில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு மீண்டும் ஜனவரி முதல் வாரத்தில் விசாரணைக்கு வருகிறது.
அப்போது அரசுத் தரப்பில் தாக்கல் செய்யவுள்ள விவரங்கள் குறித்து பல்வேறு தரப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன. மேலும் இந்த வழக்கின் இறுதியில் நீதிமன்றம் முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
*
தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏரி, குளங்கள் இருந்த இடங்கள் அதிகாரிகளின் துணையுடன் தனியாரால் களவாடப்பட்டுள்ளன. தனியார் தவிர அரசு பயன்பாட்டுக்காகவே ஏராளமான நீர்நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன. மாநிலமெங்கும் நூற்றுக்கணக்கான நீர்நிலைகள் தூர்க்கப்பட்டு அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கான சில உதாரணங்கள் மட்டும் இதோ: சென்னை நேரு ஸ்டேடியம் கோயம்பேடு மார்க்கெட் கோயம்பேடு பேருந்து நிலையம் வள்ளுவர் கோட்டம் பனகல் மாளிகை வேளச்சேரி ரயில் நிலையம் முகப்பேர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பறக்கும் ரயில் திட்ட பாதை சேலம் பேருந்து நிலையம் விழுப்புரம் பேருந்து நிலையம் |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT