Published : 17 Apr 2021 03:16 AM
Last Updated : 17 Apr 2021 03:16 AM
இந்தியாவின் முதல் பறவைகள் காப்பகம் என்ற பெருமைமிக்க திருப்புடைமருதூர் பறவைகள் காப்பகத்தில் நூற்றுக்கணக்கான பறவைகள் தற்போது கூடுகள் கட்டி தங்கியிருக்கின்றன. இப்பறவைகளுக்கு எவ்வித இடையூறுகளையும்ஏற்படுத்தாமல் இங்குள்ள மக்கள் காவலர்களாக விளங்குகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளில் உள்ள நீராதாரங்களில் ஏராளமான பறவைகள் வசிக்கின்றன. இங்குள்ள மரங்களில் கூடுகட்டி குஞ்சுபொரித்து, குஞ்சுகள் வளர்ந்த பின்னர் இங்கிருந்து இடம்பெயர்ந்து செல்கின்றன.
வீரவநல்லூர் அருகே தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் சுவாமி கோயிலைச் சுற்றி இலுப்பை, மருது, ஆலமரம், நெட்டிலிங்கம் போன்ற மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. நூற்றாண்டுகள் கடந்த இந்த மரங்களில் தங்குவதற்காக, ஆண்டுதோறும் குறிப்பிட்ட சீஸன் காலத்தில் பல்லாயிரக்கணக்கான பறவைகள் வந்து செல்கின்றன.
பல ஆண்டுகளாகவே இப்பகுதிக்கு பறவைகள் வந்து செல்வதால், காப்பகமாக வனத்துறையால் பாதுகாக்கப்படுகிறது. 2.84 ஹெக்டேர் நிலப்பரப்பில் இப்பறவைகள் காப்பகம் அமைந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது. கோயிலுக்கு அருகிலுள்ள மரங்களில் நூற்றுக்கணக்கான பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்கின்றன.
அரியவகை பறவைகளான கூழைக்கிடா, பாம்புதாரா, நீலச்சிறகு வாத்து, வெண்தொண்டை வாத்து, மீன்கொத்தி, கிளுவை வாத்து, உள்ளான், கருப்பு அரிவாள் மூக்கன், நாராயணபட்சி, மஞ்சள் மூக்கு நாரை, நத்தைக்குத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், நீர்க்காகம், கல்லுக்குருவி, மஞ்சள் வாலாட்டி, சிட்டுக்குருவி, பச்சைக்கிளி, குயில், சுடலைக்குருவி, பச்சைச்சிட்டு, கொண்டலாத்தி, தாமரைக்கோழி, குண்டுக்கரிச்சான் என்று எண்ணற்ற பறவையினங்கள் தங்கியிருப்பதை, அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இங்குள்ள வயல்வெளிகளிலும் இப்பறவைகள் இரைக்காக வட்டமடிக்கின்றன.
மரங்களே பிரதானம்
இதுகுறித்து பறவைகள் ஆர்வலரும், ஆய்வாளருமான மதிவாணன் கூறும்போது, ‘‘திருப்புடைமருதூர் நாறும்பூநாத சுவாமி கோயில் நந்தவனத்தில் மிகப்பழமையான இலுப்பை, மருதம், நெட்டிலிங்க மரங்கள் இருக்கின்றன. இவை ஆண்டாண்டு காலமாக பறவைகளுக்கு மிகப்பெரிய புகலிடமாக விளங்குகின்றன.
இம்மரங்களை வெட்டி அகற்றாமல் பாதுகாப்பது சிறப்பானது. இதுபோல்ஊரைச் சுற்றிலும் ஏராளமான மரங்கள் இருக்கின்றன. வனத்துறை ஒத்துழைப்புடன் இங்குள்ள ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்துள்ளனர். மற்ற இடங்களுடன் ஒப்பிடுகையில் இங்கு மரங்கள் அதிகம் உள்ளன.
தங்களுக்கு பாதுகாப்பான பகுதியாக பறவைகள் கருதும் இடங்களுக்கு அவை ஆண்டுதோறும் வந்துவிடும். அந்தவகையில் இக்காப்பகத்துக்கும் பறவைகள் வரத்து அதிகமுள்ளது. தற்போது இங்குள்ள பனைமரங்களில் சாம்பல்நாரை பறவைகளை பார்க்க முடிகிறது. அத்துடன் கூழக்கடா, சங்குவளை நாரை அதிகளவில் உள்ளன என்று தெரிவித்தார்.
தினந்தோறும் கணக்கெடுப்பு
திருப்புடைமருதூரில் தினமும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி வரும் வனத்துறையின் வேட்டை தடுப்பு காவலர் ஏ.முருகன் கூறும்போது, ‘‘ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பறவைகள் அதிகளவில் இங்குவந்து கூடுகட்டி தங்கியிருந்து, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கின்றன.
குஞ்சுகள் வளர்ந்து பெரிதாகி பறக்க தொடங்கியதும், ஜூன், ஜூலை மாதத்தில் அவை சென்று விடுகின்றன. கூடுகளில் இருந்து தவறி விழும் குஞ்சுகளை காப்பாற்றி பருவமடைந்தவுடன் இவற்றை விடுவித்து இவ்வூர் மக்கள் மகிழ்கின்றனர்.
வற்றாத தாமிரபரணி ஆற்றின் கரையோரம் இக்காப்பகம் அமைந்திருப்பதால் பறவைகளின் தண்ணீர் தேவைக்கும், உணவுக்கும் தட்டுப்பாடு ஏற்படுவதில்லை என்று தெரிவித்தார்.
பட்டாசு வெடிப்பதில்லை
திருப்புடைமருதூர் பகுதி மக்கள் பறவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்துவதில்லை. பறவைகளை அச்சுறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிப்பதில்லை. பறவைகளின் காவலர்களாக இங்குள்ள ஒவ்வொருவரும் செயல்படுகிறார்கள். தற்போது வீடுகளையொட்டி நிற்கும் வேப்ப மரம், புளிய மரங்களிலும் பறவைகள் கூடுகள் கட்டியிருக்கின்றன. இதை இடையூறாக இங்குள்ள மக்கள் கருதவில்லை. தங்கள் பகுதிக்கு வந்த விருந்தாளிகளாக பறவைகளை இங்குள்ள மக்கள் கருதுகிறார்கள். மக்கள் ஒத்துழைப்பு இருப்பதால் இக்காப்பகத்துக்கு ஆண்டுதோறும் பறவைகள் அதிகளவில் வந்து சென்று கொண்டிருக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT