Published : 16 Apr 2021 10:25 PM
Last Updated : 16 Apr 2021 10:25 PM
"வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்படும்" என புதுச்சேரி ஆட்சியர் பூர்வா கார்க் எச்சரித்தார்.
கரோனா தொடர்பான ஆய்வு கூட்டத்துக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புதுவையில் தற்போது கரோனா பாதித்து வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் கண்டிப்பாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தால் மற்றவர்களுக்கும் கரோனா பரவக்கூடும். வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் வெளியே வந்தால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் அபராதம் விதிப்பது தீவிரப்படுத்தப்படும். எனவே மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
தற்போது கரோனா கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டர்கள் பணியில் உள்ளனர். எனவே கரோனா தொடர்பான சந்தேகங்கள், எங்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
பாதிப்பு இருந்தால் என்ன செய்யவேண்டும் என்பது போன்ற சந்தேகங்களுக்கு 104 என்ற இலவச எண் மூலம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
புதுவையில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கைகள் கையிருப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்படத்தேவையில்லை"
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT