Published : 16 Apr 2021 10:11 PM
Last Updated : 16 Apr 2021 10:11 PM

குரோம்பேட்டையில் பாலத்திலிருந்து குதித்து இளைஞர் தற்கொலை முயற்சி: ஓடும் கார் மீது விழுந்தில் படுகாயம்

சென்னை

குடும்பப் பிரச்சினை காரணமாக மனமுடைந்த இளைஞர் தற்கொலை முயற்சியாக பாலத்திலிருந்து குதித்ததில் ஓடும் கார் மீது விழுந்து படுகாயமடைந்தார்.

சென்னை, குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தின் கீழே இன்று வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது இன்னோவா கிரிஸ்டா கார் ஒன்று சாலையில் வேகமாக வந்தபோது அந்தக்காரின் மீது பாலத்தின் மேலிருந்து ஒருவர் விழுந்தார்.

விழுந்த வேகத்தில் சாலையில் விழுந்து மயக்கமானார். நல் வாய்ப்பாக பின்னால் வந்த வாகனங்கள் மெதுவாக வந்ததால் மோதாமல் தள்ளிச் சென்றன. அவர் கார் மீது விழுந்ததால் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

காரை ஓட்டி வந்தவர் எதுவும் புரியாமல் காரை ஓரங்கட்டினார். அக்கம் பக்கமிருந்தவர்கள் காரின் மீது விழுந்து சாலையில் விழுந்த இளைஞரை நோக்கி ஓடினர். மயக்கமான இளைஞர் கை கால்களில் காயத்துடன் கிடந்தார் அவரை மீட்டு குரோம்பேட்டை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் தீவிர சிகிச்சைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சமபவம் குறித்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போலீஸார் விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து அறிய அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் பாலத்தின் மேலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் வகையில் சாலையில் இளைஞர் குதிப்பதும் அவர் ஓடும் காரின் மீது விழுவதும் பதிவாகியிருந்தது.

போலீஸார் நடத்திய விசாரணையில் பாலத்தின் மீதிருந்து குதித்தவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து (34) எனத் தெரியவந்தது. இவர் சென்னை அமைந்தகரையில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாரிமுத்து பிரியாணி கடையில் சொந்த ஊர் செல்வதாகக் கூறி விடுமுறை வாங்கிக்கொண்டு கிளம்பியுள்ளார்.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக ஊருக்குச் செல்லாமல் தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதியில் சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில் இன்று குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தின் மீது நடந்து வந்த மாரிமுத்து அங்கிருந்த சுற்று சுவர் மீது ஏறி நின்று திடீரென கீழே குதித்துள்ளார்.

மாரிமுத்து குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்து மேம்பாலத்தின் மீது இருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்பது தெரியவந்தது. நல்வாய்ப்பாக இளைஞர் பிழைத்துள்ளார். ஆனால் காரை ஓட்டியவர்தான் சம்பந்தமில்லாமல் போலீஸ் வழக்கு எனச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x