

கர்ணன் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்கக்கோரிய மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன.
விருதுநகரைச் சேர்ந்த ராஜாபிரபு, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் படத்தின் டீசர் மற்றும் அந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலும் சினிமா தணிக்கை வாரியத்தின் அனுமதியுடன் ஜனவரி 19-ல் வெளியிடப்பட்டது.
பின்னர், இதே படத்தில் இடம் பெற்றுள்ள ‘பண்டாரத்தி’ எனும் பாடல் தணிக்கை வாரியம் அனுமதியில்லாமல் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலில் ‘பண்டாரத்தி என் சக்காளத்தி’ என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன.
இந்தப்பாடல் மிகவும் பின்தங்கிய பட்டியலில் உள்ள ஆண்டிப்பண்டாரம் சமூகப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. எனவே, கர்ணன் படத்திலிருந்து பண்டாரத்தி பாடலை நீக்கவும், அதுவரை கர்ணன் படத்தை வெளியிட தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.
என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல் மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த புல்லட் பிரபு, கர்ணன் படப் பாடலில் பண்டாரத்தி என் சக்காளத்தி என்ற வார்த்தை உள்ளது. இந்த வார்த்தை தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வாழும் பண்டாரம் , ஆண்டிப்பண்டாரம், ஜங்கம் , யோகிஸ்வரர் ஆகிய சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.
இந்த வார்த்தைகளை நீக்க வேண்டும் எனக்கோரி தனி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. படக்குழு சார்பில் சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இரு மனுக்களையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.