Published : 16 Apr 2021 06:02 PM
Last Updated : 16 Apr 2021 06:02 PM
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கரோனா அச்சம் காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 212 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் திருநெல்வேலி மாநகர பகுதியில் மட்டும் 84 பேருக்கும், மாவட்டத்தின் பிறபகுதிகளில் 128 பேருக்கும் தொற்று உறுதி செயய்ப்பட்டுள்ளது.
வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்:
அம்பாசமுத்திரம்- 19, மானூர் 13, நாங்குநேரி- 13, பாளையங்கோட்டை- 34, பாப்பாகுடி- 3, ராதாபுரம்- 5, வள்ளியூர்- 19, சேரன்மகாதேவி- 10, களக்காடு- 12. தற்போது மாவட்டத்தில் 1398 பேர் மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கரோனா நோய் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதால் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி பணிபுரிந்துவந்த வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்லுகிறார்கள்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தங்களது ஊருக்கு செல்வதற்காக உடமைகளோடு ரயில்நிலையத்துக்கு வரும் வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு:
திருநெல்வேலியில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் முதலில் வரும் சிலருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மற்றவர்கள் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, கொக்கிரகுளம், பெருமாள்புரம், மீனாட்சிபுரம், பாட்டப்பத்து, மேலப்பாளையம், பேட்டை, பாளையங்கோட்டை உட்பட 9 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் 86 மையங்களில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடுவதற்காக வருவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் போதுமான அளவுக்கு தடுப்பூசி இருப்பு இல்லை என்று தெரிகிறது.
தடுப்பூசி மையங்களில் இன்று காலை 9 மணிக்கெல்லாம் வந்து பெயர்களை பதிவு செய்து காத்திருந்தவர்களில் சிலருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது கோவாக்சின் தடுப்பூசி இருப்பு இல்லாததால் புதிதாக வருவோருக்கு அத்தடுப்பூசி போடப்படுவதில்லை. 2-வது தவணை போட வருவோருக்கு மட்டுமே கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊழியர்கள் 10 பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக ஏற்கெனவே பதிவு செய்திருந்த 10 பேரை தடுப்பூசி மையத்திலிருந்தவர்கள் நிராகரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த திருநெல்வேலி டவுனை சேர்ந்த சிதம்பரவள்ளி என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் தடுப்பூசிபோடும் பணி சிறிதுநேரம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அங்குவந்த சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் வரதராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், ஏற்கெனவே பதிவு செய்துள்ள 30 பேருக்கும் தடுப்பூசி போடுவதற்கு அறிவுறுத்தியதுடன், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள 10 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு தனியாக 10 டோஸ் தடுப்பூசி மருந்து அனுப்பவும் நடவடிக்கை எடுத்தனர். இந்த தடுப்பூசி மையத்தில் நேற்று முன்தினம் 60 பேருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் நேற்று பாதியளவிலேயே தடுப்பூசி போடப்பட்டது.
கரோனா பரிசோதனைக்கு பயந்து மூதாட்டி தீக்குளிப்பு
பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தத்தை சேர்ந்த சுப்பையா மனைவி கோமதி (74). இவரது சகோதரர் கேடிசி நகரில் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்குமுன் கோமதி அவரது வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார். இந்நிலையில் அவரது சகோதரருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவர் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருடன் வீட்டில் இருந்த கோமதிக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் முடிவு செய்திருந்தனர்.
தனக்கும் கரோனா இருக்கும் என்று அச்சமடைந்த கோமதி, வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பலத்த காயமடைந்த கோமதியை திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பாளையங்கோட்டை போலீஸார் விசாரிக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT