Published : 16 Apr 2021 02:35 PM
Last Updated : 16 Apr 2021 02:35 PM
நெல் மூட்டைகள் மழையில் நனைவதைத் தடுக்க திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளுக்கு அரசு தரமான தார்ப்பாய்களை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா பருவத்திற்காக மாவட்டம் முழுவதும் 103 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகளிடம் இருந்து ஒரு லட்சத்து 85 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
இதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் டன் நெல் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சம்பா உற்பத்தி அதிகமானதால் கிடங்குகள் அனைத்தும் நிரம்பி உள்ளன.
மேலும் 25 ஆயிரம் டன்கள் ஆங்காங்கே உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கம் அடைந்துள்ளன. நெல் மூட்டைகள் மாதக்கணக்கில் வெயிலில் கிடப்பதால் அடிமூட்டைகளில் சேதம் ஏற்படும் என்றும், கால்நடைகள் தின்று விடுவதால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே தேக்கம் அடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாகக் கிடங்குக்குக் கொண்டு செல்லவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கோடை மழையால் மயிலாடுதுறையில், மல்லியம், வில்லியநல்லூர், முளப்பாக்கம், மங்கைநல்லூர், பெருஞ்சேரி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
மல்லியம் மற்றும் வில்லியநல்லூர் நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வருகின்றன.
மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளைப் பாதுகாக்கக் கொடுக்கப்பட்ட தார்ப்பாய்கள் சேதமடைந்துள்ளன. இதனால் தார்ப்பாய் போட்டும் பயனில்லை என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாகச் சங்கரன்பந்தல் பாசனதாரர் முன்னேற்றச் சங்க பொதுச் செயலாளர் கோபிகணேசன் கூறும்போது, ''மழையில் நனைந்து சேதமடைந்துள்ள நெல் மூட்டைகளை அரவைக்கு அனுப்பினாலும், தரமற்ற அரிசியே கிடைக்கும். இந்த அரிசியைப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், நியாயவிலைக் கடைகளில் அரசு, விலையில்லா அரசி என்ற பெயரில் பொதுமக்களுக்குக் கொடுக்கும்.
தரமற்ற அரிசியை வாங்கிப் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உருவாகும். எனவே திறந்தவெளி சேமிப்புக் கிடங்குகளுக்கு அரசு, தரமான தார்ப் பாய்களை வழங்க வேண்டும். மேலும் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்குகளுக்கு நிரந்தரக் கட்டிடம் கட்ட அரசு, ஆண்டுதோறும் நிதி ஒதுக்க வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT