Last Updated : 16 Apr, 2021 01:23 PM

 

Published : 16 Apr 2021 01:23 PM
Last Updated : 16 Apr 2021 01:23 PM

மின் கசிவால் எரிந்து சாம்பலான வீடு: திருமானூர் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட சோகம்

அரியலூர் மாவட்டம் பாளையப்பாடி கிராமத்தில் மின்கசிவு காரணமாக எரிந்து சாம்பலான வீடு.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே நள்ளிரவில் ஏற்பட்ட மின் கசிவால் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது.

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.15) மதியத்துக்கு மேல் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில், திருமானூர் பகுதியில் நேற்று நள்ளிரவு வரை அவ்வப்போது காற்றுடன் மழை பெய்தது. இதனால், மின்சாரம் தொடர்ந்து தடைப்பட்டு, தடைப்பட்டு வந்தது.

திருமானூர் அடுத்த பாளையப்பாடி தெற்கு காலனித் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அய்யனார் (வயது 45). இவர், தனது குடும்பத்தினருடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு காற்றுடன் கூடிய மழையால், மின்சாரம் விட்டு விட்டு வந்த நிலையில், வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டியில் நள்ளிரவு 12 மணியளவில் மின்கசிவு ஏற்பட்டது.

அப்போது, அருகில் படுத்திருந்த அய்யனாரின் மகன் ராகவன், உடலில் சூடு தெரிவது கண்டு எழுந்து பார்த்தபோது, குளிர்சாதனப் பெட்டி எரிவது கண்டு, தனது தாய் தமயந்தி, சகோதரர் ராகுல், சகோதரிகள் ரம்யா, கவியரசி மற்றும் தந்தை அய்யனார் ஆகியோரை எழுப்பியுள்ளார்.

அனைவரும் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினர். காற்று வீசியதால் தீ மளமளவென வீடு முழுக்கப் பரவியது. நள்ளிரவு நேரம் என்பதால், அக்கம் பக்கத்தில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அய்யனார் குடும்பத்தினரின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அருகேயுள்ள வீடுகளுக்குத் தீ பரவாமல் அணைத்தனர்.

இருந்தபோதிலும், அய்யனார் வீட்டிலிருந்த தொலைக்காட்சி, குளிர்சாதனப் பெட்டி, கட்டில், பீரோ, பீரோவில் இருந்த பணம் ரூ.4,700, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் அனைவரது துணிகள், சமையல் பொருட்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இச்சம்பவம் குறித்து திருமானூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வீட்டை இழந்த அய்யனார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.

இந்நிலையில், இன்று (ஏப். 16) காலை அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அய்யனார் வீட்டைப் பார்வையிட்டார். தொர்ந்து, அய்யனார் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதேபோல், ஊராட்சி நிர்வாகம் சார்பில் அய்யனார் குடும்பத்துக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x